சிங்கத்திற்கு சிறுத்தை விடுத்த அழைப்பு

71

பாலிவுட்டின் இரு துருவங்களான சல்மான்கானும் ஷாருக்கானும் கிட்டத்தட்ட எலியும், பூனையுமாகத்தான் இருந்து வந்தார்கள். காரணம் மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பின் பிறந்த நாள் விழாவின் போது இவர்கள் இருவருக்கும் இடையே சண்டையும் சச்சரவும் ஏற்பட்டது. இதனையடுத்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒருவரை ஒருவர் தாக்கி சூசகமாக பேசுவதை இரு கான்களுமே வாடிக்கையாக வைத்திருந்தனர்.

இந்நிலையில் தான், மும்பையின் பாந்த்ரா தொகுதி எம்.எல்.ஏ. பாபா சித்திக் கொடுத்த ‘இப்தார்’ விருந்துக்கு வந்த ஷாருக்கானும் சல்மான்கானும் பழைய பேதங்களை மறந்து, புன்முறுவலுடன் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த ஷாருக்கான், ‘ஒரு புத்தகத்தை படிக்கும் போது ஒரே பக்கத்தில் தேங்கி நின்று விட்டால், மற்ற பக்கங்களில் உள்ள தகவல்களை அறிந்துக்கொள்ள முடியாது. மேலும் படிக்கும்போதுதான் இந்த உலகத்தின் மிக உன்னதமான உணர்வு தெரிய வருகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இப்போது மீண்டும் தங்கள் உறவை வலுப்படுத்தும் வகையில் தான் நடத்தும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ சீசன்-7ல் கலந்துகொள்ள ஷாருக்கானுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் சல்மான்கான். இதுபற்றி சல்மான் கூறும்போது, “மனிதர்கள் தங்களின் வேண்டாத நினைவுகளை நீண்ட காலத்திற்கு மனதில் வைத்துக்கொண்டிருக்க கூடாது. தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து நல்ல நண்பர்களாக இருக்கவேண்டும்” என்று கூறியிருக்கிறார். நல்ல விஷயம்தானே.

Leave A Reply

Your email address will not be published.