ராஜாராணி படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்திருப்பது இந்த வருடத்தின் ‘குடும்பத்தோடு சென்று பார்க்கவேண்டிய படம்’ என்கிற பெருமையை தந்துள்ளது என்கிறார்கள் ராஜாராணி படக்குழுவினர். நட்சத்திர கூட்டணி என்று சொல்வார்களே. அது ராஜாராணி படத்துக்கு நன்றாகவே பொருந்தும். படத்தை தயாரிப்பது ஏ.ஆர்.முருகதாஸின் ஏ.எம்.ஆர்.புரடக்ஷன்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனம். இவர்கள் ஏற்கனவே எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி என இரண்டு படங்களை தயாரித்துள்ளார்கள்.
ஆர்யா, நயன்தாரா, ஜெய் மற்றும் கேரள பைங்கிளி நஸ்ரியா என நட்சத்திர பட்டாளம் ஒரு பக்கம். அதுவும் போதாதென்று இவர்களுடன் காமெடி கலாட்டாவுக்கு கைகோர்த்திருக்கிறார் சந்தானம். இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, படத்தை இயக்கிருக்கிறார் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லீ.
எல்லோரையும் கவரக்கூடிய வகையில் இனிமையான பாடல்கள், மற்றும் நெஞ்சை நிறையவைக்கும் இசையுடன் இந்த வருடத்தின் சிறந்த காதலுடன் கூடிய இசைப்படமாக ராஜாராணி இருக்கும் என்று உத்திரவாதம் தருகிறார் இயக்குனர் அட்லீ. இந்தப்படம் வரும் செப்-27ஆம் தேதி ரிலீஸாகிறது.