கமலுக்கு புதிதாக விருதோ அல்லது பட்டங்களோ வழங்கித்தான் பெருமை சேர்க்கவேண்டும் என்பது இல்லை. ஆனாலும் அவருக்கு விருது வழங்கப்படும்போது அந்த விருதுக்கே ஒரு பெருமை கிடைத்து விடுகிறது என்றுதான் சொல்லவேண்டும். அந்த வகையில் மும்பையில் நடைபெறவிருக்கும் 15வது மும்பை திரைப்பட விழாவில் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்க இருக்கிறார்கள்.
கமல் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், கவிஞர் என பன்முகத் திறமை கொண்டவர் என்பதால் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தகுதியானவர் என்று தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்கிறார் பிரபல திரைப்பட இயக்குனரும் இந்த விருது வழங்கும் அமைப்பின் சேர்மனுமான ஷ்யாம் பெனகல். அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த விழாவில் கமலுடன் சேர்த்து ஃப்ரெஞ்ச் பட இயக்குனரான கோஸ்டா கேவ்ராஸ் என்பவருக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.