சற்குணம் என்னை மதரீதியாக மிரட்டினார்- நஸ்ரியா போடும் புது குண்டு

84

நான்கு சுவருக்குள் நான்குபேர் முன்னிலையில் சுமூகமாக பேசித் தீர்த்திருக்க கூடிய விஷயம். ஆனால் இதை நஸ்ரியா ஏன் இவ்வளவு பெரிதுபடுத்துகிறார் என்பதுதான் விசித்திரமாக இருக்கிறது. ‘நய்யாண்டி’ படத்தின் ட்ரெய்லரில் வரும் ஒரு ஷாட்டில் க்ளோசப் காட்சியில் கவர்ச்சியக நடித்திருப்பது தான் இல்லை, தனக்கு பதிலாக வேறு ஒருவரை வைத்து டூப் போட்டு படமாக்கியிருக்கிறார் என்று நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.

இப்போது கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில் இயக்குனர் சற்குணம் தன்னையும் தன் குடும்பத்தையும் மிரட்டினார் என்று கூறியுள்ளதோடு “நான் சார்ந்த முஸ்லீம் சமுதயாத்திற்கு என் மூலமாக அவமரியாதையை ஏற்படுத்துவேன் என்று சபதமே போட்டிருக்கிறார். அதன் வெளிப்ப்பாடுதான் எனக்குப் பதிலாக மற்றொருவரை வைத்து மார்ஃபிங் செய்தது” என்று ஒரு அணுகுண்டையும் தூக்கி வீசியுள்ளார்.

நஸ்ரியா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார் என்பதையும் தாண்டி மதத்தையும் இதில் உள்ளே இழுத்திருப்பதுதான் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இஸ்லாமிய சமுதாயத்திலிருந்து நிறைய நடிகைகள் தமிழ்சினிமாவில் நடித்திருக்கிறார்கள். இன்னும் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். சொல்லப்போனால் நஸ்ரியா சொல்வதைவிட பல மடங்கு கிளாமராகக்கூட நடித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரிடமும் இருந்து எந்த ஒரு இயக்குனரைப் பற்றியும் இதுவரை இப்படி மதரீதியான புகார் எதுவும் வந்ததில்லை.

ஆனால் நஸ்ரியா இப்போது நடந்துகொள்வதைப் பார்க்கும்போது, வெறும் பப்ளிசிட்டிக்காக மட்டுமே அவர் இப்படி செய்கிறார் என்று சொல்ல முடியவில்லை. அதைத்தாண்டி ஏதோ தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் இது தெரிகிறது என்கிறார்கள் சினிமா வட்டாரத்தை சேர்ந்த பலரும். “மீடியாக்கள் முன்னால் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியை திரையிட்டுக் காட்டுகிறேன், அவர்களுடன் சேர்ந்து நஸ்ரியாவும் அதைப்பார்த்துவிட்டு, அதில் தவறு கண்டுபிடித்தால் மீடியாக்களிடமே அதை சுட்டிக்காட்டட்டும்” என்று சற்குணம் கூறியுள்ளதையும் நிராகரித்திருக்கிறார் நஸ்ரியா.

மேலும் நஸ்ரியா சொல்லும் அந்த குறிப்பிட்ட காட்சியை வெட்டித்தூக்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்கிறேன் என்று சற்குணம் கூறியதையும் அவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஒரு முடிவை எடுத்துவிட்டு (அது யாருடைய தூண்டுதல் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்) அதை நோக்கி நஸ்ரியா செயல்படுவதாகத்தான் இதைப்பார்க்க வேண்டியிருக்கிறது.

இறுதியாக இயக்குனர் சற்குணமும் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிடுவது நல்லது. அதாவது “கடைசியாக ஒரே ஒரு க்ளோசப் காட்சி எடுக்க நஸ்ரியாவை அழைத்ததாகவும் அதற்கு அவர் கேரளாவில் இருப்பதால் ஒரு ஷாட்டுக்காக மட்டும் தன்னால் வரமுடியாது என்றும் வேறு யாராவது ஒருவரை வைத்து எடுத்துக்கொள்ளுங்கள் என நஸ்ரியாவே தன்னிடம் சொல்லிவிட்டு இப்போது ஏன் மாற்றிப் பேசுகிறார் என தெரியவில்லை” என சற்குணம் கூறியுள்ளார்.

அப்படியானால் நஸ்ரியா கேரளாவில் இருந்து அவரிடம் இப்படிக் கூறியதால் (அதாவது அனுமதி தந்ததால்) வேறு ஆளை வைத்து அந்த க்ளோசப் காட்சியை எடுத்தாரா?, இல்லை அந்தக்காட்சியை படமாக்கவே இல்லையா? என்பதையும் சற்குணம் தெளிவுபடுத்திவிட்டால் நல்லது. ஏனென்றால் இப்போது இவ்வளவு பிரச்சனையும் அதை வைத்துதானே உருவாகியிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.