எவ்வளவு பணமும் செல்வாக்கும் இருந்தாலும் நினைத்த எல்லாவற்றையும் நடத்திவிட முடிகிறதா என்ன? அப்படி ஒரு கையறு நிலையில்தான் இருக்கிறார் ‘பாலிவுட் பாட்ஷா’ ஷாருக்கான். அவரது ஆதர்ஷ கிரிக்கெட் வீரர் சச்சின் இந்தியாவுக்காக விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டியை நேரில் கண்டுகளிக்க முடியாத இக்கட்டான சூழலில் சிக்கிக்கொண்டு இருப்பதுதான் ஷாருக்கானின் விரக்திக்கு காரணம்.
படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்வதால் கிரிக்கெட்டை பார்க்க முடியாதென்று நினைத்து விடாதீர்கள்.. ஷாருக்கானுக்கு ஏற்பட்டிருப்பது வித்தியாசமான பிரச்சனை. காரணம் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பதுதான். உலகின் எந்த மூலையில் இந்த டெஸ்ட் நடந்தாலும் சென்று பார்த்துவிடும் வல்லமை கொண்ட ஷாருக்கானால் மும்பை வான்கடே மைதானத்திற்குள் நுழையமுடியாது என்பதுதான் சோகம்.
காரணம் கடந்த ஐபிஎல் மேட்ச்சின்போது வான்கடே மைதானத்தின் பாதுகாவலர்களுடன் ஷாருக்கான் செய்த தகராறு தான். இதனால் இந்த மைதானத்திற்குள் நுழைய ஷாருக்கானுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சரி.. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இதற்கு முன் நடந்த டெஸ்ட் போட்டியில் சச்சினின் ஆட்டத்தைப் பார்க்க நான்காவது நாள் நேரம் ஒதுக்கி பிளான் பண்ணியிருந்தார் ஷாருக். அந்தோ பரிதாபம்.. போட்டி மூன்றாவது நாளே முடிவுக்கு வந்துவிட்டது.
யாரோ ஒரு சாதாரண நபருக்கு இப்படி தடை விதிக்கப்பட்டிருந்தால் கூட, அவர் இந்தப்போட்டியை தடையில்லாமல் வந்து பார்த்துவிட்டுப்போக முடியும். காரணம் அவரை யார் அடையாளம் கண்டுபிடித்துவிட முடியும்?. ஆனால் ஷாருக்கான உலகமறிந்த பிரபலம் என்பதால் அப்படி செய்யவும் முடியாது என்பதுதான் சோகத்திலும் சோகம். சினிமாவில் வருவதைப்போல மாறுவேடத்தில் வேண்டுமானால் போகலாம்.. அதுவும் அவரது ஆத்ம திருப்திக்காகத்தானே தவிர அதை யாரிடமும் வெளிப்படையாக சொல்லிக்கொண்டு பெருமைப்படவும் முடியாது. அதனால்.
இப்போது முதல் வரியை மீண்டும் படியுங்கள்.