நூறாண்டு விழா கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்திய சினிமாவின் புகழை உலக அரங்கில் பறைசாற்றிய படங்களில் முக்கியமான படம் தான் ‘சங்கராபரணம்’. சுமார் 35 வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்றதுடன், தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வசூல் சாதனை புரிந்து பல தேசிய விருதுகளையும் வாங்கி குவித்தது.
ஒரே நேரடி தெலுங்கு படமான ‘சங்கராபரணம்’ தமிழ்நாட்டில் அள்ளிக்குவித்த வசூல் அப்போது இந்திய திரையுலகையே திரும்பிப்பார்க்க வைத்தது. தற்போது இந்தப்படம் 35 எம்.எம்.சினிமாஸ்கோப்பிலும், டி.டி.எஸ் மற்றும் டிஜிட்டல் என இன்றைய நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது
இந்தப்படத்தை பிரபல இயக்குனர் கே.விஸ்வநாத் இயக்கியிருந்தார். பரத நாட்டியத்தையும், இசையையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்தக்கதையில் ஆபாசம், வன்முறை என எதுவுமில்லாமல் உணர்வுகளை தட்டி எழுப்பி படம் பார்ப்பவர்கள் அனைவரையும், அதுவும் மொழி புரியாதவர்களையும் கூட அழ வைத்தது.
சோமையாஜுலு, மஞ்சுபார்கவி, ராஜலட்சுமி, துளசி, சந்திரமோகன், அல்லு ராமலிங்கய்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்திற்கு இசையமைத்தவர் இசை மாமேதை கே.வி.மகாதேவன். ஆனால் தற்போது இந்த தமிழ் பதிப்புக்காக ரவிராகவ் என்பவர் புது வடிவத்துடன் இசையமைத்துள்ளார். ஸ்ரீசபரிகிரி வாசன் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக பி.எஸ்.அரிகரன் இந்தப்படத்தை தயாரிக்கிறார். விரைவில் இந்தப்படம் வெளியாக உள்ளது.