1987ல் நடக்கும் கதை.. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யாவை விரும்புகிறார். இனிகோ பிரபாகர் காயத்ரியை காதலிக்கிறார். வழக்கம்போல காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் ஊர் தலைவர். இதில் ஊரைவிட்டு ஓடுகிறது ஒரு காதல் ஜோடி. கடைசியில் காதல் ஜெயித்ததா, இல்லையா..? இதை வைத்துத்தான் இரண்டு மணி நேரம் ‘ரம்மி’ ஆடியிருக்கிறார்கள்.
ஆட்டநாயகன் விஜய் சேதுபதியை கைவசம் வைத்துக்கொண்டு ஆட்டம் காட்டியிருப்பார்கள் என்று பார்த்தால் ஜோக்கர் இல்லாத ஆட்டத்தை ஆடியிருக்கிறார்கள். விஜய் சேதுபதி-ஐஸ்வர்யாவின் காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. ஆனாலும் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிகள் என்னவோ குறைவுதான்.
இனிகோ பிரபாகர் இந்தப்படத்தில் கிட்டத்தட்ட கதாநாயகனாக புரமோஷன் ஆகியிருக்கிறார். ‘ப்ப்ப்ப்பா.. யார்டா இந்தப் பொண்ணு’ புகழ் காயத்ரியின் அழகுடன் நடிப்பும் இதில் கொஞ்சம் மெருகேறி இருக்கிறது. கல்லூரி மாணவராக பக்தி பழமாக வரும் சூரி ஒருசில இடங்களில் சிரிக்கவைக்கிறார்.
இமானின் இசையில் ‘கூட மேல கூட வச்சு’ பாடலைத்தவிர வேறு எந்தப்பாடலும் நம்மை கவரவில்லை. ஆனாலும் பின்னணி இசையில் நம் கவனத்தை திருப்புகிறார். அறிமுக இயக்குனர் பாலகிருஷ்ணன் இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக திரைக்கதை அமைத்திருக்கலாம். 1987 ஆம் வருடத்தில் நடக்கும் கதை என்ற உணர்விலேயே நம்மை வைத்திருக்கிறது ஆர்ட் டைரக்ஷன் டிபார்ட்மெண்ட்டின் மெனக்கெடல். அதற்கு ஒரு சபாஷ்.
விஜய்சேதுபதி, சூரியை வைத்து இன்னும் நன்றாக இருக்கலாம்.. தியேட்டருக்கு வரும் கூட்டம் விஜய்சேதுபதிக்காகத்தான். ஆனால் அவர் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த மன நிறைவை இந்தப்படம் தந்துள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.