இது கேட்கவே கொஞ்சம் மனதுக்கு கஷ்டம் தரும் விஷயம் தான். ஆமாங்க.. சினிமாவை விட்டு விலகுகிறார் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய்.. தமிழில் ‘மயக்கம் என்ன’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமானவர், தொடர்ந்து சிம்புவுக்கு ஜோடியாக ‘ஒஸ்தி’ படத்தில் நடித்தார். இரண்டுமே பெரிய இயக்குனர்கள், முன்னணி நடிகர்களின் படங்கள்தான். ஆனால் அந்தப்படங்களும் கைகொடுக்கவில்லை. ரசிகர்களும் ரிச்சாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டவில்லை.
தெலுங்கில் இந்த வருடம் அவர் நடித்துள்ள ஒரே படம் ‘பாய்’. நாகர்ஜூனாவுக்கு ஜோடியாக ரிச்சா நடித்துள்ள இந்தப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாக இருக்கிற நிலையில், ரிச்சா தானாகவே முன்வந்து சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்திருப்பது கொஞ்சம் அதிர்ச்சி தரும் தகவல்தான்.
“நான் சினிமாவை விட்டு விலகுவது பலருக்கு அதிர்ச்சி அளிக்கும் என்று எனக்குத்தெரியும். ஆனால் நடிப்பா, படிப்பா என்ற கேள்வி வரும்போது என் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் படிப்புதான் முக்கியம் என தோன்றுகிறது. அதனால் இடையில் நிறுத்திய படிப்பைத் தொடர அமெரிக்கா செல்கிறேன். எனது பெற்றோர்கள், நண்பர்களுடன் எனது பழைய வாழ்க்கையை ஆரம்பிக்க இருக்கிறேன். இந்த ஐந்து வருடங்களில் எனக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களை நான் மறக்கமாட்டேன்” என தனது இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ரிச்சா. கனத்த மனதுடன் ரிச்சாவை வழியனுப்பி வைப்போம்.