ஒரு திருமணம் இரண்டு கதைகள் என்ற கவித்துவமான பின்னனியில் நகர்கிறது படம்.
ஜான், ரெஜினா இருவருக்கும் சர்ச்சில் திருமணம் நடக்கிறது. அவர்களின் முகபாவனையிலிருந்தே தெரிகிறது இந்த திருமணத்தில் இருவருக்குமே இஷ்டமில்லையென்பது. இஷ்டமில்லாமலே எலியும், பூனையுமாக புது அப்பார்ட்மெண்ட்டில் குடிபுகுந்து நொடிக்கொரு சண்டை, நிமிஷத்துகொரு முறைப்பு என்று ஆளுக்கொரு திசையில் போகிறார்கள். திடீரென்று ஒருநாள் ரெஜினாவிற்கு வலிப்பு வந்து சரிய ஜான் பதறிப்போய் ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடுகிறான். அங்கிருந்து துவங்குகிறது ரெஜினாவின் முந்தைய வாழ்க்கைக் கதை. காதலன் சூர்யா இறந்து போன துக்கத்தில் இருந்த ரெஜினவை சமாதனப் படுத்தித் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார் அப்பா என்பதை தெரிந்து கொள்கிறான் ஜான்.
ரெஜினாவின் கதை கேட்டு உருகிப்போன ஜான் அவளிடம் அன்பு காட்ட முயல, மீண்டும் முட்டல் மோதல் துவங்குகிறது. ஜானின் நண்பன் சாரதி ரெஜினாவை சமாதானப் படுத்தி ஜானின் காதல் பற்றியும், அவனின் காதலியின் நிலை பற்றியும் சொல்ல, ரெஜினா இளகிப்போகிறாள். இதற்கிடையே இறந்து போனதாக நினைத்த சூர்யா உயிரோடு இருப்பது தெரிகிறது. ஜானும், ரெஜினாவும் இணைந்து வாழ்ந்தார்களா என்பதை படம் சொல்கிறது.
அடர்த்தியான கதையுடன், ஃப்ரேம் பை ஃப்ரேம் உணர்ச்சிக் குவியலுடன் இப்படி ஒரு படம் வந்து நீண்ட நாட்களாகி விட்டது. ஜான் கேரக்டரில் ஜாலி பையனாக வரும் ஆர்யா சின்னச்சின்ன அசைவுகள் மூலம் அனாயசமாக நடித்து அசத்துகிறார். ஒரே வீட்டில் நயன்தாராவிடம் அவர் செய்யும் குறும்புகளாகட்டும், இரண்டாம் பாதியில் நஸ்ரியாவை காதலித்து கண் கலங்குவதாகட்டும் எல்லாமே ‘ஏ’ க்ளாஸ்.
ரெஜினாவாக நயன்தாரா அப்படியொரு ப்ரெஷ். அத்தனை அழகு. சில இடங்களில் க்ளோஸ் அப் காட்சிகளில் ஜெய்க்கு மூத்தவர் என்பது தெரிகிறது. வலிப்பு வந்து நடிக்கும் காட்சியில் அப்ளாஸை அள்ளுகிறார். காருக்குள் அப்பா சத்யராஜோடு அமர்ந்து கொண்டு தன்னை விட்டுவிட்டு யு.எஸ்.போன காதலனை நினைத்து வாய் பிளந்து அழும் இடம் அசத்தல் நடிப்பு.
ஜெய் இந்த படத்தில் தான் நடிப்பில் தேர்ந்திருக்கிறார். கஸ்டமர் கேரில் உட்கார்ந்து கொண்டு நயன்தராவிடம் மொக்க படுவதும். ”அக்கா” என்று பம்முவதும் சிறப்பு. நஸ்ரியா ஆர்யாவை ”ப்ரெதர்” என்று அழைத்து சுத்தல்ல விட்டு காதலிக்கிறார். நைட்டியை பின்புறமாக தூக்கிக் கொண்டு குத்தாட்டத்தோடு அறிமுகமாவது இயல்பான நடிப்பு. சந்தானத்தின் காமெடியும், ஜி.வி.பிரகாஷின் இசையும் டைட்டான கதைக்குள் ரிலாக்ஸ் பண்ண வைக்கிறது. சத்யராஜ் கேரக்டருக்கு அளவெடுத்து தைத்தது போல் கம்பீரமாக வருகிறார்.
கணவன், மனைவி இருவரும் மனதுக்குள் ஒன்றை வைத்துகொண்டு வெளியில் ஒன்று பேசுவதை கண்ணாடி மூலம் காண்பிக்கும் இடத்தில் டைரக்டர் அட்லி. ‘குட்லி’. ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம் படத்தில் ஆளாளுக்கு கண்ணீர் விடுவது டிவி சீரியலை நினைவுபடுத்துகிறது. கடைசி வரை ஆர்யாவின் குடும்பத்தை கண்ணிலேயே காட்டவில்லை.
”நம் பக்கத்தில் இருப்பவர்கள் இறந்து போனால் பதிலுக்கு நாமும் இறந்து போயிடனும்னு அர்த்தமில்லை நமக்குன்னு ஒரு வாழ்க்கை வரும்,” என்பது போன்ற வசனங்கள் பளிச்.
தேனி கண்ணன்.