அந்த அதிகாலை நேரத்தில் பனியின் வேகம் கூடியிருந்து. கிராமத்திலிருக்கும் என் வீட்டு மாடியில் படுத்திருந்த நான் போர்வையை இழுத்துப்போர்த்தி கால்களை குறுக்கினேன்.. தூக்கம் அப்படி வந்தது. பனியை விட அதிக சிலிர்ப்பை ஏற்படுத்த காற்றில் பறந்து வந்தது அந்தப் பாடல். ’’மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர்சோலையில் மரமாவேன்’ பக்கத்திலுருந்த அம்மன் கோவிலின் ரேடியோவில் டி.எம்.எஸ் குரல். இப்படி ஒவ்வொரு நாள் காலையும் இசைப்பொழுதாகவே எனக்கு விடியும். அபோதெல்லாம் என் மனதுக்குள் கேள்வி எழும். முருகனின் முன் நின்று பாடுவதுபோல் குரலில் அத்தனை உருக்கம் காட்டும் டி.எம்.எஸ். பற்றி நமக்கு தெரியும். அந்த முருகப்பெருமானே கேட்டு வாங்கியது போன்ற அந்த வரிகளை எழுதிய கவிஞரை எத்தனை பேருக்குத் தெரியும். அபோது நான் அவரை கண்டுபிடிக்க முயன்று முடியவில்லை. சென்னைக்கு வந்த பிறகு நான் அவரைத் தெரிந்து கொண்டேன். டி..எம்.எஸ். பாடிய பெரும்பாலான முருகன் பாடலை எழுதியது. கவிஞர் ‘தமிழ் நம்பி’ என்பவர்தான். சமீபத்தில் ராஜா சாரை சந்தித்தபோது அவர் பற்றி சொன்னார்.
ராஜா சார் எழுதிய திரைப்படப் பாடல்கள், பக்தி பாடல்களை புத்தகமாக கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். அந்தப் பணிகள் குறித்து அவருடன் பேசியபோது அவர் இசையில் எனக்குப் பிடித்த முருகன் பாடலான ‘மறந்தேன் பிறந்தேன் மரம்போல் வளர்ந்தேன் முருகா…முருகா’ என்ற பாடலையும் சேர்த்திருந்தேன். அப்போதுதான் “இந்த படலை எழுதினது நான் இல்லை தமிழ் நம்பிய்யா” என்று அவரை[ப்பற்றி சொன்னார் ராஜா சார். காலத்தால் அழிக்க முடியாத பாடல்களைத் தந்த அந்த படைப்பாளி எந்த அங்கீகாரமும் பெறாமலே மறைந்து போய்விட்டார். கோவில் இருக்கும் வரை டி.எம்.எஸ். குரல் இருக்கும். காற்று இருக்கும் வரை தமிழ் நம்பி என்ற அந்த கவிஞனின் தமிழ் இருக்கும். இப்பஃபி சில முக்கியமான ஹிட் பாடலை எழுதி பார்வைக்கு வராமல் இருக்கும் சிலரை நாம் தெரிந்து கொள்வது அவசியம் என்பதால் இதை எழுதிகிறேன்.
1965 ம் ஆண்டு ஒருமுறை பிலிம் சேம்பரில் ஒரு கூட்டம். நிகழ்ச்சியில் கவிஞர் கண்ணதாசன், இயக்குனர் ஏ.பி.நாகராஜன், ஏ.எல்.சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறார்கள். விழா துவங்கும் முன் இறைவணக்கப் பாடலாக சூலமங்கலம் சகோதரிகள் ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்.’ என்ற பாடலை பாடுகிறார்கள். மேடையிலிருந்த கண்ணதாசனை அந்த வரிகள் உலுக்கியிருக்க வேண்டும். சூலமங்கலம் சகோதரிகளை அழைத்து அந்த பாடலைப் பற்றி விசாரிக்கிறார். பிறகு மேடையில் பேசும்போது “இந்த பாடல் ரொம்ப நல்லாருக்கு. ஏ.பி.நாகராஜன் அவர்கள் கந்தன் கருனை என்று ஒரு படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். அந்த படத்தில் வள்ளி பாடுவதாக ஒரு சிச்சுவேஷன் வருகிறது. அந்த பாடலை நான் எழுதிக்கொடுப்பதாக இருந்தேன். இந்த பாட்டு அந்த சிச்சுவேஷனுக்கு மிகவும் பொருத்தமாக் இருக்கும் அதனால் இந்தப் பாடலையே பயன்படுத்திக் கொள்ளவேண்டும்” என்று மேடையிலேயே அறிவித்து அந்த கவிஞருக்கு .சிபாரிசு செய்தார். இப்படி ஒரு வாய்ப்பைப் பெற்றவர் கவிஞர் பூவை செங்குட்டுவன். அந்த பாடலை அவர் எழுதி ஒருவருடத்திற்கும் மேலாகி கொலம்பியா கம்பெனியில் இசைத்தட்டாக வந்து பெரிய அளவில் பிரபலமான பிறகு படத்தில் இடம்பெற்றிருக்கிறது. இந்த பாடலுக்கு கொலம்பியா ரெக்கார்ட் கம்பெனி பூவை செங்குட்டுவனுக்கு கொடுத்த பணம் பதினைந்து ரூபாய்தான். கந்தன் கருணை படத்தில் பயன்படுத்தியதற்காக ஏ.பி.நாகராஜன் கவிஞருக்கு முன்னூறு ரூபாய் கொடுத்திருக்கிறார்.
இந்த பாடலைப்போல் எனக்கு பிடித்த இன்னொரு பாடலும் அது எழுதப்பட்ட விதமும் கேட்டீங்கன்னா ஆச்சரியப்படுவீங்க. முதல்ல அதை எழுதிய கவிஞரைப் பற்றி சொல்லிடுறேனே, குமுதம் விழா மதுரையில் நடந்தப்போ ராஜா சார் எனக்கு சொல்லியிருந்த விஷயம், “விழாவில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் கண்டிப்பா கலந்துக்கனும்ய்யா…அதனால முன்கூட்டியே சொல்லி அவரை தயார்படுத்தி வை” என்பதுதான். அந்தளவுக்கு அவர் முக்கியத்துவம் வய்ந்தவர். இசைஞானி இசையில் ஒரே ஒரு பாட்டுதான் எழுதியிருக்கிறார். அந்த ஒரு பாட்டு சூப்பர்ஹிட் பாடல். அதன் பிறகு ஏனோ அவர் பாடலே எழுதவில்லை. 70 களில் தமிழ் கவிதை உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்திய ‘வானம்பாடி’ கவிதை இயக்கத்தை ஆரம்பித்த கவிஞர்களான புவியரசு, மீரா, மு.மேத்தா, போனறவர்களில் சிற்பி ஐயாவும் ஒருவர். இப்போதும் அறக்கட்டளை ஒன்றை வைத்து ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கவிதை நூலுக்கு பரிசு வழங்கி வருகிறார். சாகித்ய அகாடமியின் தமிழக பிரதிநிதியாகவும் இருந்திருக்கிறார்.. இத்தனை ஆளுமையோடு இருந்தவர் சினிமாவிற்கு வந்தது படு சுவராஸ்யமான விஷயம்.
அது பதினாறு வயதினிலே படம் ரிலீஸ் நேரம். தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு படத்தின் விளம்பரத்திற்காக நோட்டீஸ் அடிக்க முடிவு செய்து அதற்கான வாசகங்களை எழுத அப்போது கல்லூரியில் பணியாற்றிய சிற்பி அவர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். அவரும் படத்தின் கதையை கேட்டுத் தெரிந்து கொண்டு அதை அப்படியே கவிதை நடையில் சுருக்கமாக எழுதிக்கொடுத்திருக்கிறார். சில நூறு நோட்டீஸ்களை அடித்து எடுத்துக்கொண்டு விளம்பர பணியில் தீவிரமாக இருந்திருக்கிறா ராஜ்கண்னு. பாரதிராஜா தற்செயலாக அதை படித்து விட்டு “இது யார் எழுதினது. இட் ஸ் ஃபெண்டாஸ்டிக்” என்று வியக்க, தயாரிப்பாளர் அவர் ஒரு கவிஞர் என்பதை விளக்க, “என்னோட அடுத்த படத்தில் கண்டிப்பா அவரை ஒரு பாட்டு எழுத வைக்கிறேன்.” என்று சொல்லியிருக்கிறார். பதினாறு வயதினிலே படமும் வந்து ஹிட்டாகிடுச்சு. அடுத்தப் படமாக ’கிழக்கே போகும் ரயில்’ படத்தை ஆரம்பிக்கிறார் பாரதிராஜா. சொன்னபடியே சிற்பி அவர்களை சென்னைக்கு வரவழைத்து பேசியிருக்கிறார். உஸ்மான் ரோட்டில் இருந்த அலுவலகத்தில் பாரதிராஜ ,கங்கை அமரன், இளையராஜா, பாரதிராஜா, கவிஞர் முத்துலிங்கம் ஆகியோர் இருந்திருக்கிறார்கள். சிற்பி அவர்களுக்கு முதலில் ஒரு டியூன் கொடுக்கப்படுகிறது. அது ‘பூவரசம்பு பூத்தாச்சு பொண்ணுக்கு சேதி வந்தாச்சு” டியூன். சிற்பி அந்த டியூனுக்கு “ராஜாவின் ரகசியம் தெரிஞ்சாச்சு…ராணிக்கு சேதியும் வந்தாச்சு” என்று டியூனுக்கு ஏற்ப எழுதிக்கொடுக்கிறார். பிரகு அந்த டியூனை ”நானே எழுதிவிடுகிறேன்” அங்கிருந்த கங்கை அமரன் சொல்ல, சிற்பிக்கு வேறு ஒரு டியூன் தரப்படுகிறது. அந்தப் பாடல்தான் “மலர்களே நாதஸ்வரங்கள்” பாடல்.
பாரதிராஜா கனித்தது சரியாக இருந்தது. அந்த பாடலில் தமிழ் சினிமாவிற்கு புதிய புதிய சொற்களை அறிமுகப்படுத்தினார். பாடலின் துவக்கத்தில் ராஜா சார் நாதஸ்வரத்தையும் , மிருதங்கத்தையும் ஒலிக்க வைக்க பின்னால் வரும் ஜானகியில் ஆலாபனை குரல் நம்மை மயங்கவைக்கும். அந்த மந்திரத்தை செய்ய இசைஞானியால் மட்டுமே முடியும். அடுத்து கவிஞரின் வரிகள் மலேசியா வாசுதேவன் குரலில் கம்பீரமாக ஒலிக்கும்.
மலர்களே நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மணக்கோலம் வர்ணஜாலம் வானிலே
என்று துவங்கும் பல்லவியை முடித்து அந்த சூழலுக்கு அனுபல்லவி ஒன்றை போட்டிருப்பார் ராஜா சார். அதை இப்படி நிரப்புகிறார் கவிஞர்,
பால்வண்ண மேனியை ஆகாய கங்கை
பனிமுத்து நீராட்டி அழகூட்டினாள்
கற்பகப் பூக்கொண்டு கருநீல கண்ணில்
மை தீட்டினாள் காதல் தேவன் கைகளில் சேர….
என்று வித்தியாசமான சொல்லாட்சியை பயன்படுத்துகிறார் பாருங்கள். அதுதான் வழக்கமான படலாக இது தனித்து நிற்கிறது. ஆதனால்தான் ஒரே பாட்டையும் ஹிட் பண்ண முடிந்தது அவரால். பின் வரும் சரணத்தில் கவிதை இன்னும் அழகாக இருக்கும்.
கருவிழி உறங்காமல் கனவுகள் அரங்கேற
இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே
மன்மதன் திருக்கோவில் அதில் காதல் பூஜை
என்னாளுமே அரசாளுமே காதல் வானம் பூமழை தூவ
என்று முடியும் பாடலில் பெண்குரலின் ஆலாபனைதான் இனிமையின் உச்சம். அதை கற்பனித்துப் பயனிக்க இசைஞானியால் மட்டுமே முடியும். இப்படி மென்பாடலை மனதில் விதைத்துவிட்டு அடுத்த பாடலை எழுத பேனாவை திறந்து வைத்துக்கொண்டு அவர் உட்காரவில்லை. பொள்ளாச்சியில் அமைதியாக இருந்து கொண்டு இலக்கியப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் சிற்பி பாலசுப்ரமணியம். ஆனால் கிழக்கே போகும் ரயில் படத்தில் இந்த பாடல் இடம் பெறவில்ல. பாடலுக்கான படப்பிடிப்பு நடத்த பழனியில் லொக்கேசன் பார்த்துவிட்டு கவிஞரையும் வரச்சொல்லியிருக்கிறார் பாரதிராஜா. கிராமங்களில் நீர்நிலைகளுக்குப் பக்கத்தில் முளைத்திருக்கும் மஞ்சள் நிறப்பூக்களைப் போன்று அட்டையில் தயார் செய்து பழனிக்கு அனுப்பியிருக்கிறார்கள். பார்க்க பூக்களே நாதஸ்வரங்கள் போல் இருந்திருக்கிறது. ஏனோ கடைசி நேரத்தில் படப்பிடிப்பு நடப்படாமலேயே யூனிட் திரும்பியிருக்கிறது.
சமீபத்தில் ஒருநாள் போனில் கவிஞரிடம் பேசியிருக்கிறார் ராஜா சார். ஏதேச்சையாக ஒரு சூழலை போனில் சொல்லி “பாட்டு வரிகளை போனிலே சொல்லுங்க சிற்பி நான் எழுதிக்கிறேன்” என்று தத்தகாரத்தை சொல்லியிருக்கிறார். முழு பாட்டையும் போனிலேயே சொல்லி முடிக்க,, ஐம்பதாயிரத்திற்கான செக் பொள்ளாச்சிக்குப் பறந்திருக்கிறது. இப்படி இவரைப்பற்றி பேசக்கிடைத்த வாய்பை பெருமையாக நினைக்கிறேன். காரணம் மலர்களும் நாதஸ்வரங்களும்தான்.
ஒருநாள் மேத்தா சார் வீட்டிலிருந்தேன். அப்போது ஒரு 80 வயதிருக்கும் பெரியவர் கையில் ஒரு பெரிய புத்தகத்தோடு நின்று கொண்டிருந்தார். நான் அவரை விசாரித்தபோது ”ஒரு சின்ன உதவிக்காக ஐயாவைப் பார்க்க வந்தேன்”. என்றார். நான் அவரை இன்னொரு நாள் வருமாறு சொல்லிக்கொண்டிருந்தபோதே மேத்தா ஐயா வந்தார் “ஏய் இருப்பா நீங்க வாங்க” என்று அவரை உள்ளே அழைத்துப் போய் பேசி அனுப்பிவைத்தார். அவர் போனபிறகு நான் அவரைப் பற்றி விசாரித்தேன். ”மண்ணுக்கு மரம் பாரமா…… மரத்துக்கு கிளை பாரமா.. கொடிக்கு காய் பாரமா.. பெற்றெடுத்த குழந்தைக்கு தாய் பாரமா. அப்படின்னு ஒரு பாட்டு கேட்டிருக்கியா. அந்த பாடலை எழுதினது இவர்தான். பேரு நாமக்கல் முத்துச்சாமி.” என்றதும் நான் ஆடிப்போனேன். எவ்வளவு பெரிய தவறை செய்யவிருந்தேன். என்று நான் என்னை திட்டிக்கொண்டேன். பிறகு நானே ஓடிப்[போய் அவரை ஆட்டோவில் ஏற்றி அனுப்பினேன்.. இப்படி மறக்கக்கூடாத மனிதர்களை அவ்வப்போது இந்த தொடரில் படித்து நிச்சயம் வியப்பீர்கள். இனி ராஜா சார் வாலி அவர்களை கடை நாள் சந்தித்த அனுபவத்தை அடுத்த வாரம் சொல்றேன்.
(தாழ் திறக்கும்)
தேனி கண்ணன் 9840515216