சென்னையிலிருந்து விமானம் மேலெழும்பத்தொடங்கியது. என் மனது மட்டும் கீழேயே இசைஞானியின் பக்கத்திலேயே இருந்தது. முதல் வெளிநாட்டுப்பயணம். முதல் விமானப் பயணம் இதில் எந்தவித மகிழ்ச்சியும் இல்லை. காரணம் இசைஞானியின் உடல்நிலை. ”நானும் மலேசியாவுக்குப் போறேன் ஐயா” என்று நான் சொன்னதும் சிறு புன்னகையோடு ”எனக்கும் அந்த நிகழ்ச்சிக்கும் சம்மந்தமில்லைய்யா” என்றார் ராஜா சார். ஆனால் பிறகு கார்த்திக் ராஜாவிடம் என்னைப் பற்றி சொல்லியிருக்கிறார். எனக்கும் சேர்த்து டிக்கெட் போட்டுவிட்டு கார்த்திக்ராஜா எனக்கு தகவல் சொன்னார்.
சென்னை விமான நிலையத்தில் சுங்கச்சோதனைக்காக நானும் என்னுடன் தபேலா கலைஞர் மாதவ், செனாய் கலைஞர் ராஜா, கார்த்திக்கின் நண்பர் விஜய், ப்ராங்கோ என்று நண்பர்களும் நின்றிருந்தோம். இசைஞானி இல்லாத அவர் பாடல்களின் கச்சேரி நடப்பது பெரிய மன வேதனையளித்தாலும் முதன் முதலில் கார்த்திக் ராஜா இசை நிகழ்ச்சி நடத்தப்போகிறார் என்ற மகிழ்ச்சி வேதனைக்கு மருந்தாக அமைந்தது. இந்த நேரத்தில்தான் சுங்கச்சோதனை வரிசையில் எங்களுக்குப் பின்னால் வந்து நின்றார் அஜித். அவருடன் ஷாலினி, மகள், ஷாம்லி, ரிச்சர்ட் என்று குடும்ப சகிதமாக வந்திருந்தார். விமானப் பயணிகள் எல்லோரும் அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள ஆர்வப்பட்டனர். அவர்களையெல்லாம் “இமிக்ரேஷன் முடிஞ்சப்பிறகு எடுத்துக்கலாம். அவங்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது.” என்று அவர்களை அன்பாய் அடக்கினார். இதைப்பார்த்த இமிக்ரேஷன் அதிகாரிகள் பாதுகாப்பிற்காக போடப்பட்ட தடுப்பை விலக்கி அஜித்தை உள்ளே வரும்படி அழைத்தனர். ஆனால் அவர்கள் விலக்கிய அந்த தடுப்பை தானே எடுத்து பழையபடி வைத்துவிட்டு “நான் வரிசையிலேயே வருகிறேன்.” என்று அவர்களிடம் சொல்லி விட்டு அமைதியாக நின்றார். இமிக்ரேஷன் முடிந்ததும் அவரை சூழ்ந்து கொண்டனர் ரசிகர்கள்.
ஒவ்வொருவருக்கும் தனித்தனியே நின்று பொறுமையாக போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். அந்த கூட்டத்தில் நான் போய் பேச தயக்கமாக இருந்தது. ஆனால் அஜித் என்னை கவனித்து விட்டார். ரசிகர்களை சமாளித்துக்கொண்டே என்னைப் பார்த்து தலையசைத்தார் தல. நான் பக்கத்தில் வரவும் பரிவுடன் என் தோளில் கை போட்டு தனி இடத்துக்கு அழைத்துச்சென்றார். “வீட்ல எல்லாரும் நல்லாயிருக்காங்களா, உங்க பையன் என்ன படிக்கிறான். ஸ்கூல் எப்போ தொடங்குது. நல்லா படிக்க வையுங்க. உங்க மனைவிகிட்ட நான் விசாரிச்சதா சொல்லுங்க.” என்று அக்கறையோடு பேசினார். நான் உடனே என் மனைவிக்கு போன் போட்டு கொடுக்க, “என்னம்மா நல்லாருக்கீங்களா நான் ஊருக்கு வந்ததும் கண்ணனோட வீட்டுக்கு வந்து பாருங்கம்மா” என்றார். மறுமுனையில் என் மனைவி பேசியதற்கு சிரித்துகொண்டே பதிலளித்தார். பிறகு அவருக்கான விமானம் புறப்படத்தயாரானதும் என்னிடம் விடை பெற்றுக்கிளம்பினார். பொதுவாக பத்திரிகையிலிருந்து விலகிய பிறகு அந்த நிருபரை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் நம்பர் ஒன் ஹீரோவான அஜித் இதற்கு மாறுபாடானவர். என்னை மட்டுமல்ல. என் போன்றவர்களை மறக்க மாட்டார். என்னோடு பணியாற்றிய சினிமா நிருபர் மரியாதைக்குரிய சந்துரு திடீரென இறந்து விட்டார். அவருடைய திரையுலக அனுபவத்திற்கு அவர் இறந்ததற்கு கோடம்பாக்கமே திரண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் உடல் இருந்த சவப்பெட்டியை ஒரு முனையை நான் சுமந்திருந்தேன். மறுமுனையை அஜித் சுமந்து கொண்டு வந்தார். அந்த துக்க நிகழ்ச்சிக்கு வந்தவரை பார்ப்பதற்கு கோசமிட்டபடி வாலிபர்கள் சிலர் வர, அவர்களை தானே போய் கண்டித்து அங்கிருந்து போகும்படி எச்சரித்தார். இப்படி தன்னைச்சுற்றி இருப்பவர்களின் மீது பெரும் கரிசனத்தோடு இருக்கும் பண்பை அஜித்திடமிருந்து மற்ற ஹீரோக்கள் கற்றுக்கொள்ளவேண்டும். பிறகு சந்துரு குடும்பத்திற்கு அஜித் தரப்பிலிருந்து உதவி செய்ததாக அறிந்து மகிழ்ந்தேன். அப்போது ஒரு பிரபல இயக்குனர் என்னிடம் கேட்டார், “ஏன் கண்னன் உங்களுக்கென்று ஒரு அமைப்பு இல்லையா எல்லோரையும் விமர்சிக்கும் உங்கள் நிலைமை கடைசியில் பரிதாபமாக இருக்கே. உங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருக்கே.” என்றார். “எங்களுக்குள் ஒற்றுமை மன ரீதியாக மட்டுமல்ல குடும்ப ரீதியாகவும் இருக்கிறது. ஆனால் நாங்கள் ஒன்று சேர்ந்து ஒரே அமைப்பாக, வலிமையான சங்கமாக செயல்பட்டு விடக்கூடாது என்பதில் சிலர்’ தீவிரமாக இருக்கிறார்கள்.. இப்போது இருக்கும் சங்கத்தையும் செயல்படாமல் இருக்க எல்லா ஏற்பாடுகளையும் அவர்கள் செய்துகொண்டுள்ளார்கள்.” என்று அப்போது சொல்லி வைத்தேன். அது இப்போதுவரைக்கும் உண்மையாகியிருக்கிறது.
நாங்கள் பயணித்த ஏர் இந்தியா விமானம் இரவு ஒரு மணிக்கு மலேசியாவில் தரையிறங்கியது. விமானத்தில் அமர்ந்திருந்த அந்த மூன்றரை மணி நேரமும் பெரும் அவஸ்தையாக இருந்தது. பக்கத்தில் இருந்த ப்ராங்கோ அவரின் ஐ-பேட்ல் இளையராஜாவின் பாடல்களை போட்டு விட்டு ஹெட் போனை காதில் மாட்டி விட்டார். கோழிக்கூவுது படத்தில் ‘ஏதோ மோகம் ஏதோ தாகம்’ பாடல் ஒலித்தது. மனது இன்னும் அதிகமாய் வலித்தது. இசையில் இத்தனை மாயஜாலங்களை செய்த அந்த மாபெரும் கலைஞனுக்கு உடல் நலமில்லையென்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் என்னையறியாமல் கண்ணீர் தாரை தாரையாக ஊற்றியது. பக்கத்தில் இருப்பவர்கள் அறியாதபடி துடைத்துக் கொண்டேன். நீங்களும் கேட்டுப்பாருங்கள் அங்கு இளையராஜா தெரியமாட்டார் ஒரு பெருங் கலைஞன்தான் தெரிவார். அந்த கலைஞனின் உழைப்பு உங்களையும் அழவைத்துவிடும். இப்படியே பத்தாயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் பறந்தபடி அதைவிட உயர்ந்த இடத்தில் இருக்கும் இசை மேதையின் பாடல்களை கேட்டுக்கொண்டு வருவது என்பது அரிய அனுபவம்தான்.
மலேசியாவில் இறங்கியதும் ’கிங் ஆஃப் கிங்’ இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மினி பஸ் ஒன்றில் எங்களை அழைத்துப்போக வந்திருந்தனர். வரும் வழியெங்கிலும் ஆள் அரவமற்ற சாலைகள். படு சுத்தமாக படுத்துகிடந்தன. ஒரு இடத்தில் சிக்னல் சிகப்பு நிறத்தை காண்பிக்க யாருமில்லாத சாலையில் ஒரு கார் மட்டும் பச்சை நிறத்திற்காக காத்திருந்தது. இப்படியொரு ஒழுக்கமா ஆச்சியமாகத்தான் இருந்தது. ஆனால் விஷயம் என்ன தெரியுமா. சாலை விதியை மீறும் வாகனத்தை கண்கானிப்பு கேமரா பதிவு செய்துவிடும். பிறகு வாகன உரிமையாளரின் வீட்டுக்கு நோட்டீஸ் போகுமாம். விதி மீறிய வாகனத்தின் விலையில் பாதியை அபராதமாகக் கட்டவேண்டி வருமாம். இப்படி வேட்டு வைத்தால் யார்தான் விதி மீறுவார்கள். ஒருமணி நேர பயணத்தில் அந்த ஐந்து நட்ச்சத்திர ஹோட்டலை அடைந்தோம். ‘சன் வே புத்ரா’ என்று உச்சியில் மின்னியது. ஹோட்டலின் ரிசப்ஷனே ஒன்பதாவது மாடியில் இருந்தது என்றால் பாருங்கள் அதன் உயரத்தை. அறையில் உடைமைகளை வைத்து விட்டு நாங்கள் செய்த முதல் காரியம் சுவையான சாப்பாடு எங்கு கிடைக்கும் என்று விசாரித்ததுதான். ஹோட்டலுக்கு வெளியே சாலையை கடந்தவுடன் நாகாஸ் என்ற ரெஸ்டாரெண்ட் இருந்தது. சுடச்சுட மீன் குழம்பும் தோசையும் ஆர்டர் செய்து சாப்பிட்டோம். இங்குள்ள வஞ்சிரம் மீனுக்கு அங்கே டிங்கிடி என்று பெயர். நல்ல டேஸ்டில் தயார் செய்திருந்தனர். எங்களை பார்த்ததுமே “இளையராஜா கச்சேரிக்காக வந்திருக்கீங்களா” என்று கேட்டார்கள் அங்கிருந்த தமிழர்கள். அந்தளவிற்கு நிகழ்ச்சி நடக்கப்போவது ஒரு அதிர்வை ஏற்படுத்தியிருந்தது.
அறைக்கு திரும்பினோம். மணி இரவு இரண்டரை. கொஞ்ச நேரம் டி.வி பார்க்கலாம் என்று போட்டால் மலாய் மொழியில் ஒரு ஆணும், பெண்ணும் திரிசூலம் காட்சி மாதிரி போனில் அழுதுகொண்டிருந்தனர். சோதனைடா சாமி என்று டி.வியை ஆஃப் பண்ணினேன். காலையில் எழுந்ததும் நண்பர் ஹரி என்னை பத்துமலை முருகன் கோவிலுக்கு அழைத்துச்சென்றார். பெருங் குகைக்குள் கற்கள் விழுதுகள் போல தொங்கிகொண்டு பயமுறுத்த 260 படிகள் கொண்ட செங்குத்து பாதையில் ஏறினோம். அப்படியொரு கூட்டம். பரவசமான நிலையில் வணங்கிச்சென்றது.. தைப்பூசம் நாளில் மட்டும் 10 லட்சம் பகதர்களுக்கு மேல் கூடி மலையேறி முருகனை தரிசிப்பார்கள். இந்த மன நிலையில்தான் அன்று இசைஞானியின் கச்சேரிக்கும் ரசிகர்கள் குவிந்திருந்தனர்.
’ஸ்டேடியம் மட்ரேக்கா’ என்ற மலேசியாவின் பாரம்பரிய மைதானத்தில் பதினைந்தாயிரம் ரசிகர்கள் கூடினர். அன்று விடுமுறை தினமென்பதால் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வந்திருந்தனர். மலேயா சுதந்திரம் பெற்றபோது அதற்கான விழா இந்த திறந்தவெளி மைதானத்தில்தான் நடந்ததாம். அந்த பாரம்பரிய மரியாதை இப்போது இந்த மைதானத்துக்கு உண்டு. மைக்கேல் ஜாக்ஸன் கச்சேரியும் இங்குதான் நடந்திருக்கிறது. என்ன பெரிய வியப்பு என்றால் பதினைந்தாயிரம் பேர்கள் குழுமியிருந்த இடத்தில் கூச்சலோ, சப்தமோ இல்லை. ஒரு பிரார்த்தனை கூடத்தின் அமைதி அங்கிருந்தது. இசைஞானியின் உடல்நிலை பற்றி அவர்களுக்கு தெரிந்திருந்தாலும் கூட அவர் வந்துவிட மாட்டாரா என்ற எதிர்பார்ப்பும், கவலையும் எல்லோர் முகத்திலும் பரவியிருந்தது. அமைதிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
முதல் நாள் காலையிலிருந்தே வாத்யக்குழுவினருடன் ஒத்திக்கையில் ஈடுபட்டிருந்தார் கார்த்திக் திறந்த வெளி அரங்கில் பாடல்கள் எல்லாருக்கும் சரியாக கேட்க வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெட்டார். இந்த நேரத்தில் ஒரு சீனியர் டெக்னீசியனைப் பற்றி நான் சொல்ல வேண்டும். கருப்பு வெள்ளை சினிமா காலத்தில் ஜி.ஆர்.நாதன் என்ற ஒளிப்பதிவாளர் இருந்தார். சூட்டிங் ஸ்பாட்டில் ஒளிப்பதிவை பார்க்க இன்றைக்கு எத்தனையோ கருவிகள் வந்துவிட்டன். ஆனால் ஜி.ஆர்.நாதனுக்கு விரல் நகம் போதுமாம். விரல் நகத்தில் இருக்கும் இளஞ்சிகப்பு நிறம்தான் ஒரு நெகட்டிவில் இருக்கும்.. அதனால் இந்த பழக்கத்தை அவர் அனுபவத்தில் பெற்று அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார். இவரைப் போல் கார்த்திக் ராஜாவும் ஒலி அமைப்பதில் பெரிய வித்தகம் பெற்றிருந்தார். அன்று காலையிலிருந்து மைதானத்தின் பல இடங்களுக்கும் சென்று பாடலை வாசிக்கச் சொல்லி பரிசோதனை செய்து கொண்டார். எந்த மூலையில் ரசிகர்கள் அமர்ந்து கேட்டாலும் அவர்களுக்கு பாடல் தெளிவாக கேட்க வேண்டும் என்பதில் பெரும் அக்கறை எடுத்துக்கொண்டார்.
சரியாக 8 மணிக்கு கச்சேரி ஆரம்பித்தது. இசைக்கலைஞர்கள் அவரவர் இடத்தில் அமர, எந்த வித அறிவிப்பும் இல்லாமல் கார்த்திக் “டாடி…கேட்குதா டாடி..” என்று சொன்னதும் மேடையின் பின்புறமிருந்த பிரமாண்டமான திரையில் ராஜா சார் தோன்ற, அப்படியொரு ஆரவாரம், கரகோசம் என்று அந்தப் பகுதியே அதிர்ந்தது. தி.நகர் வீட்டிலிருந்து வீடியோ கான்ப்ரன்ஸிங் மூலமாக ராஜா சார் பேசத்தொடங்கினார். “உங்கள் எல்லோருக்கும் வணக்கம். நான் உங்களை சந்திக்க வருவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தேன். நான் வர வில்லை என்ற வருத்தம் வேண்டாம். இப்பவும் நான் என் பாடல்கள் மூலமாக உங்கள் பக்கத்தில் தான் இருக்கப்போகிறேன். எப்போதும் இருப்பேன்,” என்று ‘ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ’ என்று பாடி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தளர்ந்த குரலில் அவர் பாடுவதை பார்த்த கூட்டம் உணர்ச்சி வசப்பட்டு கைதட்ட, ஒரு பக்கம் “தலைவரே…தலைவரே..” என்று கூட்டம் ஆர்ப்பரித்தது. அந்த நேர உணர்வுகளை வார்த்தைகளில் வடிக்க முடியாது. நானும் ஒரு ரசிகராக இருந்தும் கூட மலேசிய மக்கள் இசைஞானியின் மேல் வைத்திருக்கும் பாசத்திற்கு முன் என் ரசிகத்தன்மையெல்லாம் ஒன்றுமில்லை என்றே தோன்றியது.
ராஜா சார் பாடி முடித்ததும் எஸ்.பி பாலசுரமணியம் அவரிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தார். ”ராஜா நீ வரலைன்னதும் எவ்ளோ பேர் டிக்கெட்டை வாபஸ்
வாங்கிட்டாங்க தெரியுமா.” என்றார்.
உடனே ராஜா சார், “அவங்கல்லாம் நெட்ல என் பாட்டை டவுன் லோட் செய்து கேட்டாங்களே அப்ப எனக்கு எதாவது கொடுத்தாங்களா என்ன” என்றார். உடனே, கார்த்திக் ராஜா, “டாடி உலகத்தில் உயர்ந்த விஷயங்கள் எல்லாமே இலவசமாகத்தான் கிடைக்கும் அம்மாவின் பாசம், கருணை இப்படி எல்லாமே இலவசம்தானே டாடி” என்று சொல்லவும் இதை எதிர்பார்க்காத ராஜா சார் சட்டென்று சிரித்து விட்டார். கச்சேரி துவங்கியது. கார்த்திக் பேச ஆரம்பித்ததும் கண் கலங்கி விட்டார்.
“அப்பா சினிமாவில் முப்பது வருடங்கள் செய்த சாதனையை யாரும் மிஞ்ச முடியாது. அந்த இடத்தை நிரப்ப யாராலும் முடியாது. இதை அவருடைய மகனாக சொல்லவில்லை ஒரு ரசிகனாக சொல்றேன். அவருடைய ரசிகனா அவருக்கு ஆஞ்சியோ செய்யும்போது பக்கத்தில் இருந்து பார்த்தேன். இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது.” என்று சொல்லிகொண்டிருக்கும்போதே குரல் உடைந்து அழுதே விட்டார். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு கச்சேரியை ஆரம்பித்தார்.
பவதாரிணி ஜனனி ஜனனி பாடலை முழுதுமாக பாடி முடித்தார்.
‘நான் கடவுள்’ படத்திலிருந்து ஓம் சிவ ஓம் பாடல் மிரட்டலான ஓலி பலத்துடன் ஓங்கி ஒலித்தது. எஸ்.பி.பி ‘தோளின் மேலே பாரம் இல்லே கேள்வி கேட்க யாரும் இல்லை’ என்ற பாடலை “கேள்வி கேட்க ராஜா இல்லே” என்று பாடி குறும்பு செய்ய, அடுத்து வீடியோ கான்ப்ரன்ஸிங்கில் ராஜா சார் பேசும் போது “பாலு கேள்வி கேட்க ராஜா இல்லேன்னு என்ன வேணாலும் பாடாத நான் இங்க உட்கார்ந்து எல்லோரையும் பார்த்துகிட்டுதான் இருக்கேன். நான் இல்லாத அந்த மேடையில் என் பாடலை வாசிக்கப் போற இசைக்கலைஞர்கள் இப்பதான் உண்மையாகவே என்னைப் புரிந்து கொண்டு வாசிக்கப் போறாங்க.” என்று சொன்னார். மேடையில் இருந்த கலைஞர்கள்
நெகிழ்ந்து உணர்வுவயப்பட்டார்கள்.
சித்ரா, மனோ, ஹரிச்சரண் என்று அத்தனை பேரும் அசத்தலாக பாடினார்கள். அப்பா இல்லாத குறையை கார்த்திக் ராஜா போக்கினார். அதிலும் திறந்த வெளி அரங்கில் ஒலி அமைப்புகள் சரியாக கேட்க வேண்டுமென்பதற்காக கார்த்திக் செய்த டெக்னிகல் மாயஜாலம். ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போட்டது. மனோ வழக்கம் போல் பாடலுக்கு இடையில் காமெடியும் பண்ணி அசத்தினார். அதுவும் எஸ்.ஜானகி மாதிரி அவர் பேசி காட்டியது அத்தனை பேரின் அடி வயிற்றையும் பதம் பார்த்தது. அவர் ‘இதயத்தை
திருடாதே படத்தின் பாடலான ஓ பிரியா ப்ரியா..’ என்று பாடத்தொடங்கியதும் வயலின் பக்கமிருந்து அம்மன் கோவில் கிழக்காலே படத்தின் பாடலான ‘சின்ன மணிக்குயிலே’ படலின் இசையை வாசித்து மனோவை கலாய்க்க கூட்டம் சிரிப்பில் ஆழ்ந்தது.
மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் அப்பாவின் நினைவாக முரட்டுக்காளை படத்திலிருந்து ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ பாடலை பயங்கர கைத்தட்டலுக்கு இடையே பாடினார்.
சரியாக நள்ளிரவு ஒரு மணிக்கு நிகழ்ச்சி முடியும் தருவாயிலும் இன்னும் பாடுங்கள் என்று கூட்டம் ஏங்கிக்கேட்டது, கார்த்திக் ராஜாவோ திக்கு முக்காடிப்போனார். “போலீஸ் இவ்வளவுதான் அனுமதிச்சிருக்காங்க.” பணிவுடன் கேட்டுக்கொண்டதன் பிறகுதான் பதினைந்தாயிரம் பேரும் மைதானத்தை விட்டு எழுந்தனர். அப்போதும் அப்படியொரு அமைதி. இல்லை எல்லோர் மனதிலும் நிம்மதி. அது இசைஞானி கொடுத்தது.
(தாழ் திறக்கும்)
தேனி கண்ணன் 9962815216