‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ – பெண்களுக்கு எதிரான படம் அல்ல

85

“நல்ல பொண்ணுகளை அழவச்சுப் பாக்குற எந்த ஆம்பிளையும் நல்லா இருக்கமுடியாது.. இதுதான் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படத்தோட மையக்கரு. தவிர டைட்டிலைப் பார்த்து இது ஏதோ பெண்களுக்கு எதிரான படம் என நினத்துவிடவேண்டாம்” என்கிறார் படத்தின் இயக்குனரும் ஹீரோவுமான சிவராமகிருஷ்ணன். ‘குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்’ படத்தில் கதாநாயகனாக மாறிய இந்த சேரனின் உதவி இயக்குனர், தற்போது இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறி தனது லட்சியத்தை எட்டிப்பிடித்திருக்கிறார்.

இன்று காலை ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்தப்படத்தில் சிவராமகிருஷ்ணனுக்கு ஜோடியாக ‘மனம்கொத்தி பறவை’ ஆத்மியா, மற்றும் பெங்களூரை சேர்ந்த காருண்யா ராம் இருவரும் நடித்துள்ளனர். மிக முக்கியமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ் நடித்துள்ளார்.

ஒரு பெண் தன் காதலன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்று தெரிந்ததும் அந்தக்காயத்துக்கு மருந்து போடுகிறேன், அதன்மூலம் ஆறுதல் தேடுகிறேன் என இன்னொரு காதலனைத்தான் தேடுகிறாள். ஆனால் தனது பாசத்திற்குரிய பெற்றோரிடம் இதுகுறித்து மனம் விட்டுப் பேசுவதில்லை. அந்த இரண்டாவது காதலன் இவளது பலவீனத்தை தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறான். விளைவு மீண்டும் காதல் தோல்வி. அப்போது மகளின் காதல் மீது பெற்றோருக்கு வரும் பாருங்கள் ஒரு கோபம், வெறுப்பு.. அதுதான் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ என்கிறார் சிவராமகிருஷ்ணன்.

இந்தப்படத்தை கண்ணன் என்பவர் தயாரித்துள்ளார். இவர் முதல்வர் ஜெயலலிதா நடித்த காலத்திலேயே அவரை வைத்து படம் தயாரித்த பழம்பெரும் அனுபவசாலி. இந்தப்படத்திற்கு ‘தமிழ்படம்’ கண்ணன் இசையமைத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.