போங்கடி நீங்களும் உங்க காதலும் – விமர்சனம்

156

எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவ்வப்போது நண்பன் சென்ராயனுடன் சேர்ந்து சில சில்லறை திருட்டுகளை செய்கிறார் ராமகிருஷ்ணன். காதல் என்றாலே கண்களில் அமிலத்தை சுரக்கும் அவர்மீது வலியவந்து விடாப்படியாக காதல் வலை வீசுகிறார் ஆத்மியா. முதலில் உதாசீனப்படுத்தும் ராமகிருஷ்ணன் பின்னர் காதலில் விழ அங்கேதான் ஆரம்பிக்கிறது ட்விஸ்ட்.

ராமகிருஷ்ணனை வேண்டுமென்றே பல சிக்கல்களில் சிக்கவைத்து போலீஸிலும் மாட்டிவிடுகிறார் ஆத்மியா. எதற்காக இந்த பழிவாங்கல் என்பதுதான் க்ளைமாக்ஸில் அவிழ்க்கப்படும் முடிச்சு.

இயக்குனர் ராமகிருஷ்ணனே கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். புதியபாதை பார்த்திபன் மாதிரி தெனாவெட்டான கேரக்டரில் பொலிகாளை மாதிரி சுற்றித்திரிவது, காதலில் விழுந்தபின் காதலியின் காலில் விழுந்து கெஞ்சுவதும் என ஓரளவு தன் பணியை சரியாக செய்திருக்கிறார்.

ஆத்மியா முதல் பாகத்தில் ‘அவன் எனக்கு வேணும்’ என ஒரே டயலாக்கை திரும்ப திரும்ப சொல்வதில் கடுப்படித்தாலும் இரண்டாம் பாகத்தில் சோபிக்கிறார். கூடவே தோழியாக வரும் காருண்யா பாந்தமான நடிப்பு. காமெடிக்கு சென்ராயன்.. சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். முயல் முரளி பந்தாவாக அறிமுகமாகி, வில்லனாக மாறி, கடைசியில் பரிதாப முடிவுக்கு ஆளாவது கொஞ்சம் அந்நியப்பட்டு நிற்கிறது.

கமிஷனராக ஜெயபிரகாஷ் கம்பீரம்.. ஆனால் அவரது போர்ஷன் கிளைக்கதையாக வந்தாலும் ஒட்டாமல் தனித்து நிற்பது பலவீனம். கண்ணன் இசையில் தஞ்சை செல்வியின் டைட்டில் பாடலான காதலே காதலே’ பாடல் ஈர்க்கிறது.

கேங் ரேப்பின் கோரத்தை சாடியிருக்கும் அதே நேரத்தில் காதலிக்கும் பெண்கள் அனைவரையும் வாரியிருப்பது கொஞ்சம் ஓவர் தான். ராமகிருஷ்ணன் பெண்களை ஓவராக திட்டுவதையும் படத்தில் தனது சலம்பல்களையும் இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

Comments are closed.