‘டிசி’ (DC) விமர்சனம்

27

நடிகர்கள் : லோகேஷ் கனகராஜ், சஞ்சனா, வாமிகா கபி, கஸ்தூரி ராஜா, தலைவாசல் விஜய், கிரிஷ் தயால், அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி, ஷரத் ரவி, பிரணவ் தியோஃபைன், ஏ. ராஜரிஷி, பாலாஜி தேவிபிரசாத்
இசை : அனிருத்
ஒளிப்பதிவு : முகேஷ் ஜி
இயக்கம் : அருண் மாதேஸ்வரன்
தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் ‘டிசி’ ரசிகர்களை கவரும் படமா ? அல்லது கதற வைக்கும் ரனகளப் படமா ?, விமர்சனத்தை பார்ப்போம்.

கொலை குற்றவாளியான லோகேஷ் கனகராஜ், போலீஸால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு உதவி செய்வதற்காக சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை கொலை செய்கிறார். அதே சமயம், அந்த குடும்பத்து சிறுவனின் படிப்புக்கு உதவி செய்ய முடிவு செய்கிறார். ஆனால், போலீஸை கொன்றதால் அவரை என்கவுண்டரில் போட்டு தள்ள போலீஸ் தேடுகிறது. போலீஸிடம் இருந்து தப்பிக்க தலைமறைவாகும் லோகேஷ் கனகராஜ், சஞ்சனாவை சந்திக்கிறார். அவருடனான அந்த சந்திப்பு நீடிப்பதற்குள் லோகேஷ் கனகராஜை பிடிக்க வரும் போலீஸாரால் சஞ்சனா சுட்டு கொலை செய்யப்படுகிறார்.

இதனால் போலீஸ் மீது கடும் கோபமடையும் லோகேஷ் கனகராஜ், அங்கிருந்து தப்பிப்பதோடு, தங்களது எதிரிகளை பழிவாங்க முடிவு செய்கிறார். அப்போது வாமிகா கபியை சந்திக்கும் அவர், பிடிக்காத வாழ்க்கை வாழும் வாமிகாவை அதில் இருந்து மீட்கிறார். தன்னை காப்பாற்றிய லோகேஷ் கனகராஜுடன் பயணிக்கும் வாமிகா கபியையும் போலீஸ் தேட, இரண்டு குற்றவாளிகளும் இணைந்து பயணிக்க தொடங்கும் போது இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. உயிர் பிழைப்பதற்காக ஓடும் இவர்களது வாழ்க்கையை இந்த காதல் மாற்றியதா ? அல்லது இவர்கள் போலீஸின் துப்பாக்கிக்கு பலியானார்களா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

தவறு செய்பவர்களை போலீஸ் தட்டிகேட்பார்கள், ஆனால் அந்த போலீஸே தவறு செய்தால், அவர்களது பாணியில் தட்டிகேட்பவர்களுக்கு ரவுடி மற்றும் குற்றவாளி முத்திரை குத்தப்படும். அப்படிப்பட்ட அடையாளத்துடன் பயணிக்கும் நாயகன், போலீஸால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பழி தீர்க்க களம் இறங்க, இரு தரப்புக்கும் இடையே நடக்கும் மோதலை அதிரடியாக மட்டும் இன்றி ரசிக்கும்படியாகவும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் காட்சி மொழியில் சொல்லியிருக்கிறார்.

நாயகனாக அறிமுகமாகியிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தேவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் அதிரடியாக அறிமுகமாகியிருக்கிறார். கதபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாகவும், அளவான நடிப்பின் மூலமாகவும் கவனம் ஈர்ப்பவர், ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் வாமிகா கபி, தனது நரக வாழ்க்கையை தன் உடல்மொழி மூலமாகவே நேர்த்தியாக பிரதிபலித்திருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் சஞ்சனா.ஏ.கே, அதிகப்படியான ஒப்பனையோடு அறிமுகமாகி சில காட்சிகள் தலைகாட்டினாலும், அவரது முடிவு பார்வையாளர்கள் மனதை கனக்க செய்கிறது.

தலைவாசல் விஜய், கஸ்தூரி ராஜா, கிரிஷ் ட்ய்ஹயால், அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி, ஷரத் ரவி, பிரணவ் தியோஃபைன், ஏ.ராஜரிஷி, பாலாஜி தேவிபிரசாத், அட்டுல் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வு.

ஒளிப்பதிவாளர் முகேஷ்.ஜி, ஆக்‌ஷன் காட்சிகளை ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருப்பதோடு, படம் முழுவதும் ஒரே வண்ணத்தை பயன்படுத்தி பார்வையாளர்களின் கவனத்தை எளிதில் ஈர்த்து விடுகிறார். வித்தியாசமான கோணங்கள் மற்றும் வேகமான கேமரா பயணம் ஆகியவற்றின் மூலம் சாதாரண காட்சிகளை கூட பார்வையாளர்கள் கவனிக்கும்படி செய்திருக்கிறார்.

அனிருத்தின் இசை தான் படத்தின் மிகப்பெரிய பலம். அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளை கூட நெருடல் இல்லாமல் ரசிக்க முடிகிறது என்றால் அது அனிருத்தின் பின்னணி இசை தான். படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை அனிருத்தின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

படம் முழுவதும் வன்முறை காட்சிகள் நிறைந்திருந்தாலும், அதை கதையோடு பயணிக்க வைத்து பார்வையாளர்களையும் படத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஜி. கே. பிரசன்னா.

இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் வழக்கமான ஸ்டைலில் வன்முறை சற்று தூக்கலாக இருந்தாலும், தேவதாஸ் – சந்திரா ஜோடியின் காதல் அரும்பும் காட்சிகள் மூலம் அத்தனை வன்முறை காட்சிகளையும் மறந்துவிட்டு, பார்வையாளர்களை காதலில் மூழ்கடித்து விடுகிறது.

விறுவிறுப்பான திரைக்கதையோடு, இரத்தமும், சதையும் நிறைந்த காட்சிகள் வடிவமைப்போடு படம் வேகமாக நகர்ந்தாலும், கதை மாந்தர்களின் ஆழ் மனதில் இருக்கும் கோபம், எதிர்பார்ப்பு, ஏக்கம், ஏமாற்றம் ஆகிய உணர்வுகளை ரசிகர்களிடத்தில் கடத்தியிருக்கும் இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் அதிரடி மற்றும் ஸ்டைலிஷான மேக்கிங்கும், அனிருத்தின் அபாரானமான பின்னணி இசையும் ‘டிசி’-யை கொண்டாட வைத்திருக்கிறது.

ரேட்டிங் 4/5

Comments are closed.