மெகாஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி என்ற அடையாளத்துடன் 1996ல் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்துவைத்த பவன் கல்யாண் இந்த 17 வருடங்களில் 22 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். காரணம் வருடத்திற்கு ஒரு படம் கொடுத்தாலும் அது நச்சென்று இருக்கவேண்டும் என்பது இவரது ஃபார்முலா.
நடிப்போடு மட்டுமே நின்றுவிடாமல் ஸ்டண்ட் காட்சிகள் ஒருங்கிணைப்பு, பின்னணி பாடுவது என சகல துறைகளிலும் இறங்கி கலக்கும் பவன் கல்யாண், கடந்த பத்து வருடங்களாக திரைக்கதை மேற்பார்வையாளர் பணியையும் கவனித்து வருகிறார். அவரது படங்களின் வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம்.
பவன் கல்யாண் நடித்து சூப்பர்டூப்பர் ஹிட்டான ‘கப்பர்சிங் படத்தை தொடர்ந்து தற்போது ‘கப்பர்சிங்-2’ தயாராக நிருக்கிறது. இந்தப்படத்திற்கான பூஜை கடந்த 21ஆம் தேதிதான் நடைபெற்றது. இந்தப்படத்தை பிரபல இயக்குனர் சம்பத் நந்தி இயக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு வரும் மே மாதம் துவங்க இருக்கிறது இந்தப்படத்தை தசரா ரிலீஸாக வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
வழக்கமாக இரண்டாம் பாகம் என்றால் முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது முதல் பாகத்திற்கு முன நடந்த கதையாகவோ தான் இருக்கும். ஆனால் ‘கப்பர்சிங்-2’ இது இரண்டிலுமே சேராத ஒரு புதிய வகைப்படம் என்கிறார் இயக்குனர் சம்பத் நந்தி.