ஒருநாளில் நடக்கும் சம்பவங்கள் படமாகும் சீசனில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் தான் ‘சுற்றுலா’. உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்பட்டு நண்பர்களின் உதவியுடன் பதிவு திருமணம் செய்ய காதலியை அழைத்துக்கொண்டு ஊட்டிக்கு வருகிறான் ஹீரோ. பதிவு திருமணத்தன்று சில திடுக்கிடும் நிகழ்வுகள் நடக்கின்றன. நண்பர்கள் அனைவரும் மர்மமான முறையில் மாயமாக, காதலர்கள் அதிர்ச்சியில் உறைகிறார்கள். அடுத்தடுத்து செல்போன் மூலம் மிரட்டல் தொடர காதலர்களும் நண்பர்களும் தங்கள் உயிரை காப்பாற்ற, உயிருக்கு பயந்து ஓட ஆரம்பிக்கிறார்கள். இவர்களை இப்படி ஓட ஓட விரட்டுவது யார் என்பது ஆச்சர்யமும் அதிர்ச்சியும் தரும் களைமாக்ஸ்.
‘எங்கேயும் எப்போதும்’, ‘சென்னையில் ஒருநாள்’ போன்ற படங்களில் நடித்த மிதுன் கதாநாயகனாக நடிக்கிறார். முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ரிச்சர்டு நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீஜி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரஜன், சான்ட்ரா, ஜெகன் மற்றும் சிங்கமுத்து ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி வி.ராஜேஷ் ஆல்பர்ட் இயக்கும் இந்தப்படத்திற்கு பரணி இசையமைக்கிறார். ஊட்டி, கோத்தகிரி, கூடலூர், குன்னூர், மைசூர் ஆகிய சுற்றுலா தளங்களில் இதுவரை யாரும் சென்று பார்த்திராத அடர்ந்த காட்டு பகுதியில் இந்தப்படம் படமாக்கப்படுள்ளது.