‘துப்பாக்கி’ படத்தின் இந்தி ரீமேக்கை ‘ஹாலிடே’ என்ற பெயரில் அக்ஷய்குமாரை வைத்து இயக்கி முடித்துவிட்டுத்தான், தற்போது விஜய் நடிக்கும் புதிய படத்தின் ஷுட்டிங்கில் அடியெடுத்து வைத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்போது கொல்கத்தாவில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் நாம் சொல்ல வந்தது இந்தப்படத்தைப் பற்றி அல்ல. விஷயம் ‘ஹாலிடே’வைப் பற்றியது.
‘ஹாலிடே’ படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் ஒருபக்கம் நடந்துகொண்டு இருக்கிறது. இப்போது முருகதாஸுக்கு இந்தப்படத்தில் விஜய்யை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்கும் எண்ணம் எழுந்திருக்கிறதாம். அது பாடலில் தலைகாட்டுவதாகவோ, இல்லை ஒரு காட்சியில் வந்துபோவதகவோ கூட இருக்கலாம்.
ஏற்கனவே பிரபுதேவாவின் நட்புக்காக ‘ரவுடி ரத்தோர்’ படத்தில் அக்ஷய்குமாருடன் சேர்ந்து ஒரு பாடலில் சில நொடிகள் நடனம் ஆடியிருந்தார் விஜய். இப்போது முருகதாஸின் முறை. இதற்கு மட்டும் மறுப்பு சொல்லவா போகிறார் விஜய்..?