ராஜேஸ் அல்ல… கமல் படத்திற்கு வசனம் கிரேசி மோகன் தான்..!

78

விஸ்வரூபம்-2 படத்தை தொடர்ந்து கமல் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் ‘உத்தம வில்லன்’. முதலில் இந்தப்படத்தை கமலே இயக்கி நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது படத்தை கமலின் நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.

ரமேஷ் அரவிந்த்துக்கும் கமலுக்கும் நெருங்கிய நட்பு உண்டு. ‘சதிலீலாவதி’, ‘பஞ்சதந்திரம்’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’, ‘மன்மதன் அம்பு’ என சில படங்களில் கமலுடன் இணைந்து நடித்திருக்கிறார். அதோடு கமலை வைத்து சதிலீலாவதி படத்தின் ரீமேக்கையும் கன்னடத்தில் இயக்கி இருக்கிறார். காவிரி பிரச்சனையில் கன்னட திரையுலகினருடன் சேர்ந்துகொண்டு தமிழ்நாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழில் அவர் மீண்டும் கால் வைக்கமுடியாத சூழல் இருந்தது. கமல்தான் தனது ‘மன்மதன் அம்பு’ படம் மூலம் மீண்டும் அவரை தமிழுக்கு அழைத்து வந்தார்.

இந்நிலையில் மீண்டும் தமிழுக்கு வர சரியான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரமேஷ் அரவிந்துக்கு ‘உத்தம வில்லன்’ படத்தை இயக்குவதன் மூலம் தமிழிலும் இயக்குனராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப்படத்தின் வசனங்களை ‘சிவா மனசுல சக்தி’ இயக்குனர் எம்.ராஜேஸ் எழுத இருக்கிறார் என சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. ஆனால் இதில் உண்மையில்லை என ரமேஷ் அரவிந்த் மறுத்திருக்கிறார். அத்துடன் கமலின் ஆஸ்தான வசனகர்த்தாவான கிரேசி மோகன் தான் இந்தப்படத்தின் வசனங்களை எழுதுகிறார் என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.