தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருந்த விஷாலுக்கு ‘பாண்டியநாடு’ படத்தின் வெற்றி மிகப்பெரிய உற்சாகத்தை அளித்திருக்கிறது. அதேபோல ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் கிடைத்த வெற்றியை இந்தப்படத்தின் மூலம் தொடர்ந்து தக்கவைத்திருக்கிறார் சுசீந்திரன்.
தமிழகத்தில் ‘பாண்டியநாடு’ படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் ஓடிக்கொண்டு இருக்கிறது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என அனைத்து இடங்களிலும் இந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து மேலும் காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.
தனது முதல் தயாரிப்பான இந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்துள்ளார் விஷால். இதனால் ‘பாண்டியநாடு’ படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்து வருகிறார். அவருடன் படத்தின் இயக்குனர் சுசீந்திரனும் இருக்கிறார்.
‘பாண்டியநாடு’ திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களுக்கும் சென்று வர ஆசைப்படும் விஷால், கடலூர், சிதம்பரம், பாண்டிச்சேரி, திருவண்ணாமலை போன்ற மாவட்ட தியேட்டர்களுக்கு இதுவரை விசிட் அடித்துள்ளார். இதையடுயத்து கோவை, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு செல்ல இருக்கிறார்.
ரசிகர்களிடம் விஷால் பேசும்போது, “என் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படமாக இதை கருதுகிறேன். இந்தப்படம் வெற்றி அடைந்ததற்காக ரசிகர்கள், பார்வையாளர்கள், டைரக்டர் சுசீந்திரன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல வெளியிடமுடியாமல் சிக்கலில் தவிக்கும் ‘மதகராஜா’ படத்தை டிசம்பர் அல்லது ஜனவரியில் ரிலீஸ் செய்ய முயற்சி எடுப்பேன். மதகராஜாவும் வெற்றிப் படமாக அமையும்” என்று கூறினார்.