காமெடி நடிப்பில் புகுந்து விளையாடி தமிழக ரசிகர்களை எல்லாம் தன் வசப்படுத்திவிட்டார் சிவகார்த்திகேயன். ஓ.கே. அடுத்து அப்படியே ஒரே மாதிரி நடித்துக்கொண்டிருந்தால் ரசிகர்களுக்கும் போரடித்துவிடும்.. நடிப்பவருக்கும் சலிப்பு தட்டிவிடும். இதனை நன்கு புரிந்துகொண்ட சிவகார்த்திகேயன் இப்போது ஓசைப்படாமல் தனது ரூட்டை மாற்றி இருக்கிறார்.
நம்பித்தான் ஆகவேண்டும்… சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் என்பதை. இப்படி அவர் தடாலடியாக ஆக்ஷன் ரூட்டில் இறங்க, சினிமாவில் அவரது குருநாதரான(!) தனுஷ் தான் காரணம். சில மாதங்களுக்கு முன் இயக்குனர் துரை செந்தில்குமார் ஒரு போலீஸ் கதையை தனுஷிடம் சொல்ல அந்தக்கதை தனுஷிற்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது. ஆனால் போலீஸ் கேரக்டரில் நடிக்க தனது உடல்வாகு ஒத்துழைக்காது என்பதால் யோசித்த தனுஷ்,எதற்கும் இருக்கட்டும் என அந்த கதையை பிடித்துவைத்திருந்தார்.
தற்போது எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர்சங்கம் என சிவகார்த்திகேயனின் கேரியர் விர்ரென ஏறிவருவதால் தான் ரிசர்வ் செய்துவைத்திருந்த போலீஸ் கதையில் சிவகார்த்திகேயனை நடிக்க சொல்லிவிட்டார் தனுஷ். எதிர்நீச்சல் படத்தை தயாரித்த தனுஷே இந்தப்படத்தையும் தயாரிக்க, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இசைக்கு அனிருத், காமெடிக்கு சதீஷ் எனஎதிர்நீச்சல் டீம் அப்படியே இதிலும் களம் இறங்குகிறது. கதாநாயகியாக நடிக்கத்தான் ஒரு முன்னணி நாயகியை தேடிவருகிறார்கள்.