நடிகர் சங்கத்தில் சற்குணம் மீது நஸ்ரியா புகார்

35

இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் பிரபலம் ஆக ஆக பிரச்சனைகளும் தேடிவரத்தானே செய்யும். அதற்கு நஸ்ரியா மட்டும் விதிவிலாக்காகி விடுவாரா என்ன? இதுவரை தான் உண்டு, தன் வேலை உண்டு என எந்த பிரச்சனையிலும் சிக்காமல் இருந்த நஸ்ரியா, முதன்முறையாக ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

தற்போது தனுஷுக்கு ஜோடியாக நய்யாண்டி படத்தில் நடித்திருக்கிறார் நஸ்ரியா. படமும் வரும் 11ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் சற்குணம் தன் அனுமதி இல்லாமலேயே சில காட்சிகளில் தன்னை கவர்ச்சியாக படம்பிடித்திருப்பதாகவும் இது ஒப்பந்த விதிகளுக்கு முரணானது என்றும் நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார் நஸ்ரியா. இதனை தனது ஃபேஸ்புக்கிலும் அப்டேட் செய்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்புதான் ஃபேஸ்புக்கில் பத்து லட்சம் பேர் நஸ்ரியாவை பின் தொடர்வதாக ஒரு சர்வே வெளியானது. இப்போது நடிகர் சங்கத்தில் புகார் செய்த விவகாரத்தையும் தனது ஃபேஸ்புக்கில் நஸ்ரியா கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

‘நய்யாண்டி’படம் ஷூட்டிங்கில் இருந்தபோது அப்படிப்பட்ட ஒரு காட்சி படமாக்கப்பட்டிருந்தால் அது நஸ்ரியாவுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. அப்போதே அவர் இது சம்பந்தமாக பிரச்சனையை எழுப்பியிருக்கலாம். ஆனால் படம் ரிலீஸாக இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் நஸ்ரியா இப்படி ஒரு சர்ச்சையை கிளப்பியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

இன்னொரு பக்கம் இதுபோன்ற ஒரு காட்சியில் கொஞ்சம் கவர்ச்சியாக நடிக்குமாறு தன்னை இயக்குனர் சற்குணம் கேட்டதாகவும் அதற்கு அப்போதே தனக்கு விருப்பம் இல்லை என கூறிவிட்டதாகவும் சொல்கிறார் நஸ்ரியா. அதனாலேயே இயக்குனர் சற்குணம் நஸ்ரியாவின் அனுமதியில்லாமல் அவருக்கு தெரியாமலேயே இப்படி ஒரு காட்சியை படமாக்கியதோடு அந்தக்காட்சியை படத்திலும் இடம்பெறச் செய்யப்போவதாகவும் தைரியமாக நஸ்ரியாவிடம் கூறியுள்ளார் என்றும் நஸ்ரியா தரப்பில் சொல்லப்படுகிறது.

ஒருவேளை இது படத்தின் பப்ளிசிட்டிக்காக அடிக்கிற ஸ்டண்டாக இருக்குமோ என நினைத்தால் அதற்கு வாய்ப்பே இல்லை. காரணம் தனுஷ் படத்திற்கு இந்த மாதிரி பப்ளிசிட்டி செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. மேலும் பப்ளிசிட்டிக்காக தன்னுடைய பெயரை வேண்டுமென்றே நஸ்ரியா கெடுத்துக்கொள்வாரா என்ன? அனேகமாக, நய்யாண்டி படத்தின் பிரிமியர் காட்சியை பார்த்தபின்னர்தான், நஸ்ரியா தான் இவ்வாறு ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கவேண்டும் என்றும் அதன் பின்னர்தான் இத்தகைய அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் என்றும் தெரிகிறது.

இதேபோன்ற ஒரு பிரச்சனையை கே.வி.ஆனந்த் முதன் முதலாக இயக்கிய ‘கனாக்கண்டேன்’ படத்தின்போது அதில் கதாநாயகியாக நடித்த கோபிகா எழுப்பினார். அந்தப்படத்தில் தான் கவர்ச்சியாக நடித்திருப்பதுபோல காட்சிகள் இருக்கின்றன என்றும் ஆனால் தான் படப்பிடிப்பின்போது அப்படி நடிக்கவில்லை என்றும் அப்போது பரபரப்பாக புகார் கூறியிருந்தார் கோபிகா. இப்போது நஸ்ரியா அதே மாதிரி புகார் கூறியிருக்கிறார். உண்மை என்னவென்று இயக்குனர் சற்குணம் தான் விளக்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.