இன்னும் ஆச்சர்யம் விலகவில்லை. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும் பாண்டிராஜ் இயக்கிவரும் புதிய படத்தில் சிம்புவுடன் நயன்தாரா ஜோடியாக நடிக்க சம்மதித்திருப்பதை, இயக்குனர் பாண்டிராஜ் இதை எப்படி சாதித்தார் என்றால் அது ஒரு பெரிய கதை. படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்றாலும் முக்கியமான ‘மயிலா’ என்ற கேரக்டரில் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார் பாண்டியராஜ்.
பாண்டிராஜ் சொன்ன கதையும் இந்த கேரக்டரும் நயன்தாராவுக்கு பிடித்துப்போனாலும் ஹீரோ சிம்பு என்றதும் முதலில் தயங்கியிருக்கிறார். ஆனால் பாண்டிராஜோ பாலிவுட் நட்சத்திரங்களான் ரன்பீர்கபூரும், தீபிகா படுகோனேவும் தங்களது காதல் முறிவுக்குப்பின்னும் கூட இணைந்து நடித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இதனை தொழில் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் அங்கே வேறு சலனங்களுக்கு வாய்ப்பே இல்லை என்றும் பாண்டிராஜ் எடுத்துக்கூற, அவர் அளித்த நம்பிக்கையில் சம்மதித்திருக்கிறார் நயன்தாரா.
சிம்புவுக்கும் இதே மாதிரியான குழப்பம் எழ அவரையும் இதே ரீதியில் சமாதானப்படுத்திவிட்டாராம் பாண்டிராஜ். எது எப்படியோ பிரிந்தவர்களை தனது படத்தின் மூலம் அட்லீஸ்ட் மீண்டும் நண்பர்களாகவாவது சேர்த்துவைத்திருக்கும் பாண்டிராஜின் முயற்சி நிச்சயம் பாராட்டத்தக்கது தான்.