பழம்பெரும் நடிகரும், தெலுங்கு முன்னணி ஹீரோ நாகார்ஜூனாவின் தந்தையுமான நாகேஸ்வராராவ் ஒரு காலத்தில் தெலுங்கு சினிமா உலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவர். 1950களில் சில தமிழ்ப்படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது அவர் கேன்சரால் பாதிக்கப்பட்டு இருப்பது திரையுலகினரையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வருத்தமான செய்திதான். ஆனால் சனிக்கிழமை இந்த தகவலை தானே தெரிவித்த நாகேஸ்வரராவ், இதற்காக சிகிச்சை எடுத்துவருவதாகவும், வயதானவர்களுக்கு அவ்வளவு விரைவாக கேன்சர் பரவாது என டாக்டர்கள் கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
“நான் சினிமாவில் புற்றுநோயல் பாதிக்கப்பட்டவனாக நடித்திருக்கிறேன். அப்போதெல்லாம் புற்றுநோய் தாக்கியவர்கள் கடைசியில் இறந்துபோவார்கள் என்ற எண்ணத்தைத்தான் படங்களின் மூலம் விதைத்திருந்தோம். ஆனால் இன்று அறிவியல் தொழில்நுட்பம் அதையெல்லாம் வென்றுவிட்டது. 1974ல் ஒருமுறை எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தபோது சிகிச்சை அளித்த டாக்டர்கள் இன்னும் 14 ஆண்டுகள்தான் அதாவது 1988 வரைதான் உயிரோடு இருப்பேன் என்று சொன்னார்கள். ஆனால் அதையும் தாண்டி இதோ 25 வருடங்கள் வாழ்ந்துவிட்டேன். அதேபோல இந்த கேன்சரையும் வெல்லும் மன உறுதி எனக்கு இருக்கிறது. டாக்டர்களின் சிகிச்சையும் மக்கள் எனக்கு அளிக்கும் நம்பிக்கையும் தான் எனக்கு தைரியத்தை தந்திருக்கின்றன” என்றும் சொல்லியிருக்கிறார் நாகேஸ்வரராவ். அவரது நம்பிக்கை வென்று அவர் பூரண குணமடைய நாமும் பிரார்த்திப்போம்.