‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தின் மூலம் பளிச் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் பாலாஜி மோகன். சொல்லப்போனால் குறும்பட இயக்குநர்கள் சினிமாவுக்குள் நுழைய எளிதாக வழிவகுத்து கொடுத்தவர். இப்போது தனது அடுத்த படத்தை தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இயக்குகிறார்.
மலையாளத்தில் தற்போது இளம் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் இந்தப்படத்தில் ஹீரோவாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார். ஏற்கனவே ‘சலால மொபைல்ஸ்’ என்கிற மலையாளப் படத்திலும் துல்கர் சல்மானும், நஸ்ரியாவும் ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கின்றனர்.
தற்போது இந்தப்படத்திற்கு இசையமைக்க அனிருத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார் பாலாஜி மோகன். கதைக்கு இறுதிவடிவம் கொடுத்து முடித்தபோது இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என பாலாஜிமோகனும் படத்தின் தயாரிப்பாளரும் ஒரேமாதிரியாக யோசித்திருக்கிறார்கள். மேலும் அனிருத்தும் இவர்களுடன் இணைந்து வேலைபார்க்க ஆர்வமாக இருப்பதால் அனிருத்தையே ஒப்பந்தமும் செய்துவிட்டார்கள். இதன்மூலம் அனிருத்தும் மலையாள சினிமாவில் காலடி எடுத்துவைக்கிறார்.