1978ஆம் வருடம் ‘திரநோட்டம்’ என்ற படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை துவங்கியவர் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால். கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு தான் நடிக்கவந்தபோது தன்னை முதன் முதலாக படம் பிடித்த கேமராவை தற்போது சொந்தமாக்கியிருக்கிறார்.
மலையாள திரைப்பட வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான அந்த கேமராவை தனக்கு தரவேண்டும் என்று ஒரு திரைப்பட விழாவில், கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் மோகன்லால் கோரிக்கை வைக்க, இப்போது அந்த கேமராவை மோகன்லாலுக்கு வழங்க அனுமதி அளித்துள்ளார் கேரள முதல்வர்.
மோகன்லால் பழமை வாய்ந்த சிற்பங்கள் மற்றும் கலைப்பொருட்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த நாட்டுடைய பாரம்பரிய சிற்பங்களை, கலை பொருட்களை வாங்கி வந்து தன் வீட்டை அலங்கரிக்கும் ரசனையுடையவர். அந்த வரிசையில் தன்னுடைய வீட்டில் தன்னை முதன் முதலாக படம் பிடித்த கேமராவும் இடம் பெறப் போவதில் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும் கேரள சூப்பர் ஸ்டார், போட்டோகிராபர் என்ற படத்தில் மனிதர்களின் வாழ்வியலை படம்பிடிக்கும் போட்டோகிராபராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.