தமிழ்சினிமாவில் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கென்று ஒரு அந்தஸ்தான இடம் இருக்கிறது. ரஜினி, கமல், விஜயகாந்த், தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகர்ஜூனா, மலையாளத்தில் மோகன்லால், இந்தியில் சல்மான்கான் உள்ளிட்ட சூப்பர்ஸ்டார் மற்றும் மெகா ஸ்டார்களை வைத்து கடந்த 27வருடங்களில் 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. ரஜினியின் பாட்ஷா ஒன்று போதுமே.. காலகாலத்துக்கும் தமிழ்சினிமாவில் இவரது பெயரை சொல்லிக்கொண்டிருக்க..
தற்போது சுரேஷ் கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் புதிய படக்கம்பெனியை தொடங்கியுள்ள சுரேஷ் கிருஷ்ணா, இந்த நிறுவனம் மூலம் புதிய படம் ஒன்றை தயாரித்து, இயக்கவிருக்கிறார். காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் இந்தப்படத்தில் நாயகனாக பிரின்ஸ் மற்றும் நாயகியாக ‘2012 மிஸ் இந்தியா’ வானியா மிஷ்ரா ஆகியோர் அறிமுகமாகின்றனர். படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், படப்பிடிப்பை விரைவில் துவங்க உள்ளார் சுரேஷ் கிருஷ்ணா.