‘தீனா’ முதல் ‘கஜினி’ வரை ஏ.ஆர்.முருகதாசிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஏ.எம்.சம்பத்குமார் தயாரிக்கும் படம் ‘இருவர் ஒன்றானால்’. இந்தப்படத்தை ஏ.ஆர்.முருகதாசிடம் பணியாற்றிய இன்னொரு இணை இயக்குனரான அன்பு.ஜி இயக்குகிறார். இந்தக்கதையை கேட்டமாத்திரத்தில் தான் டைரக்ட் செய்யும் படத்தைக் கூட தள்ளி வைத்து விட்டு, உடனே இந்த கதையை தானே தயாரிப்பது என முடிவு செய்தாராம் சம்பத்குமார்.
கேளம்பாக்கத்தில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவரான பிரபு ஹீரோவாக நடிக்க, விஸ்காம் மாணவி மாலினி, மாடல் தீக்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். ‘வேட்டைக்காரன்’ படத்தில் “என் உச்சி மண்டையில சுர்ருங்குது…” பாடலை பாடிய குருகிருஷ்ணா இந்தப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
படத்தின் முழுப்படப்பிடிப்பும் ஹிந்துஸ்தான் கல்லூரியிலேயே படமாக்கப்பட்டுள்ளது. அதனால் நாளை நடைபெறும் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவையும் கேளம்பாக்கம் ஹிந்துஸ்தான் கல்லூரியிலே நடத்துகிறார்கள். இந்தவிழாவில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். முழுவதும் கல்லூரியிலேயே எடுக்கப்பட்ட ஒரு தமிழ்ப்படத்தின் இசைவெளியீட்டு விழா அதே கல்லூரியில் நடைபெறுவது தமிழ்சினிமாவில் இதுதான் முதன்முறை.