குஷி படத்தில் விஜய்யின் நண்பராக சின்ன கேரக்டரில் அறிமுகமான ஷாம், ஜீவா இயக்கிய 12பி படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து கிட்டத்தட்ட 25 படங்களில் நடித்த ஷாம், கிக் என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும் பாப்புலரானார். ஆனாலும் தமிழ்சினிமாவில் ஷாமிற்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தும் வெற்றி எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்பது வருத்தமான ஒன்றுதான்.
தானே ஒரு படத்தை சொந்தமாக தயாரித்து அதில் நடித்து தன் திறமையை நிரூபிக்க வேண்டும் என்று விரும்பினார் ஷாம். தனது நண்பரான டைரக்டர் வி.இசட்.துரை சொன்ன 6 மெழுகுவர்த்திகள் கதை அவருக்கு பிடித்திருந்தது. அவரது அண்ணனை தயாரிப்பாளராக்கி இந்தப்படத்தை 2011ஆம் ஆண்டு துவக்கினார். தன் திறமை அனைத்தையும் கொட்டி நடித்ததோடு பணத்தை தண்ணீராக செலவழித்து படத்தை எடுத்து முடித்தார்.
ஆனால் படம் முடிந்தும் கூட படத்தின் வெளியீடு தள்ளிப்போய்கொண்டே இருந்தது. இந்த நிலையில் ஸ்டூடியோ 9, அபி அண்ட் அபி, ரெட் கார்பெட் மூவீஸ் ஆகியவை இந்தப்படத்தை வாங்கியுள்ளன. ஒருவழியாக இந்தமாதம் 20ஆம் தேதி ‘6 மெழுகுவர்த்திகள்’ ரிலீஸாகிறது.