கார்த்திக் நடித்த வருஷம் 16 படத்தை ஞாபகமிருக்கிறதா..? அற்புதமான கிராமத்து பின்னணியில் ஒரு தாத்தாவும் பேரனுக்குமான அன்பை, அதன் ஊடாக ஒரு மெல்லிய காதலை வெகு அழகாக படம்பிடித்துக் காட்டியிருப்பார்கள். அதேபோல தாத்தாவுக்கும் பேரனுக்குமான பாசத்தை மையமாக வைத்து இன்னொரு படம் வரவில்லை என்றே சொல்லலாம்.
இப்போது அந்தக் குறையை தீர்க்கப்போகிறார்கள் ராஜ்கிரணும் விமலும். ஆம்.. இயக்குனர் சற்குணம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் மஞ்சப்பை படத்தில் இவர்கள் இருவரும் தாத்தா-பேரனாக நடித்திருக்கிறார்கள். விமலுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.
இந்தப்படத்தை சற்குணத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த என்.ராகவன் திரைக்கதை எழுதி இயக்குகிறார். திருப்பதி பிரதர்ஸ் சார்பில் என்.சுபாஷ் சந்திரபோஸ் தயாரிக்கும் இந்தப்படத்தை முதல்காப்பி அடிப்படையில் எடுத்துத் தருகிறார் சற்குணம்.
மஞ்சப்பை என்பதால் கிராமத்துக்கதையோ என நினைத்துவிட வேண்டாம். சென்னைக்கு மஞ்சப்பையுடன் பிழைப்பு தேடி வந்து, இங்கே வசிக்கும் மக்களைப் பற்றிய கதைதான் இந்த ‘மஞ்சப்பை’. வாகை சூடவா படத்திற்கு இசையமைத்த ஜிப்ரான் தான் இந்தப்படத்திற்கும் இசையமைக்கிறார். அக்டோபரில் வெளியிடும் வகையில் மஞ்சப்பை படத்தின் வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன.