மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான ‘22 ஃபீமேல் கோட்டயம்’ படம் தான் தற்போது ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ என்ற பெயரில் ரீமேக்காக தயாராகியுள்ளது.. நடிகை ஸ்ரீப்ரியா தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். மலையாளத்தில் ரீமா கல்லிங்கல் நடித்த துணிச்சலான வேடத்தில் தமிழில் நடித்திருக்கிறார் நித்யாமேனன்.
பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் கொடுமையும் அதை ஒரு பெண் எதிர்த்து போராடி தனக்கு அநீதி இழைத்தவர்களுக்கு எப்படி தணடனை கொடுக்கிறாள் என்பதும் தான் இந்தப்படத்தின் கதை. தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் இந்தப்படம் தயாராகியுள்ளது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகிவிட்ட நிலையில் படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு, படத்திற்கு எல்லோரும் பார்க்கும் வகையிலான ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவிலேயே அறிவிக்கப்படும் என்று ஸ்ரீப்ரியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.