பொங்கலுக்கு இங்கே விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் ‘வீரம்’ என சூப்பரான ஜல்லிக்கட்டு நடக்க இருக்கிறது. அதேசமயம்தான், ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டம். அப்படி என்றால் அங்கே மட்டும் ரேக்ளா ரேஸ் இருக்காதா என்ன? டோலிவுட் இளவரசன் மகேஷ்பாபுவும் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூனும் தான் இந்த ரேஸில் கலந்து கொள்பவர்கள்.
மகேஷ்பாபு தற்போது ‘1-நேனோக்கடினே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில், மகேஷ்பாபுவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் கீர்த்தி சனான். சாயாஜி ஷிண்டே தான் வில்லன்.. காதல், காமெடி, ஆக்ஷன் கலந்த கலவையாக எடுக்கப்பட்டு வரும் இந்த படம் மகேஷ்பாபு தன் ரசிகர்களுக்கு படைக்கவுள்ள, செமத்தியான விருந்தாக இருக்குமாம். ஆந்திர ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில், மசாலா பொடி தூவியுள்ளார் இயக்குனர் சுகுமார். இந்தப்படத்தை ஜனவரி 14ல் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
ஆனால் அல்லு அர்ஜூன் நடித்துவரும் ‘ரேஸ் குர்ரம்’ படமோ இதற்கு நேர்மாறான பக்கா குடும்பப்படம். இந்தப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்தப்படத்தின் 60 சதவீத வேலைகள் முடிவடைந்துவிட்டன. அதனால் சங்கராந்தி கொண்டாட்டத்திற்கு இந்தப்படம் தயார் என படத்தின் தயாரிப்பாளர் அறிவிப்பும் செய்துவிட்டார். ஆகவே, பந்தயம் மிக கடினமாக ஆனால் சுவராஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.