சினிமாவை கதைக்களமாக வைத்து தமிழில் படங்கள் வெளிவருவது மிகவும் அரிதான விஷயம். காரணம் நம் ரசிகர்கள் அப்படிப்பட்ட கதைகளை விரும்புவதில்லையா, இல்லை நமது இயக்குனர்கள், ரசிகர்கள் விரும்பும் வகையில் கொடுப்பதில்லையா என்பது இன்னும் புலப்படாத ஒன்றுதான். இதற்கு உதாரணமாக தமிழில் வெளியான வெள்ளித்திரை மற்றும் ரஜினி நடித்த குசேலன் ஆகிய படங்களை சொல்லலாம்.
இந்த இரண்டு படங்களும் மலையாளத்தில் சூப்பர்ஹிட்டாக ஓடிய படங்களின் ரீமேக்தான். காரணம், கேரளாவில் சினிமாவை பின்புலமாகக் கொண்டு வெளிவரும் படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு அதிகம். அதனாலேயே வருடத்திற்கு நான்கு படங்களாவது சினிமா பின்னணியை கதைக்களமாக கொண்டு வெளியாகின்றன்.. வெற்றியும் பெறுகின்றன. கடந்த இரண்டு வருடங்களில் வெளியான பெஸ்ட் ஆக்டர், வெள்ளரிப்பிறாவிண்டே சங்கதி, மேக்கப் மேன், தி ஃபிலிம் ஸ்டார், பத்மஸ்ரீ டாக்டர் சரோஜ்குமார், கொச்சி டூ கோடம்பாக்கம் என உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
மலையாளத்தில் இப்போது மீண்டும் சினிமா பின்புலத்தில் ஒரு படம் தயாராகிறது. 1980களில் புகழின் உச்சியில் இருந்த ஒரு டாப் ஹீரோவின் வளர்ச்சியும் அவரது வீழ்ச்சியும் தான் கதை. அதற்காக இது ஒரு பீரியட் படமோ என்று நினைத்துவிட வேண்டாம்.அக்மார்க் கமர்ஷியல் படமே தான். இந்தப்படத்தில் அந்த ஹீரோவாக நடிப்பவர் ஃபஹத் ஃபாசில்.
இந்தப்படத்தின் கதை நிகழும் இடமாக நமது கோடம்பாக்கத்தை தேர்ந்தெடுத்து இருப்பதுதான் ஹைலைட்டான விஷயம். இன்னும்பெயர் வைக்கப்படாத இந்தப்படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது.