மதயானை கூட்டம் – விமர்சனம்

133

ஊருக்குள் பெரியமனிதராக இருக்கும் ஜெயக்கொடித்தேவருக்கு இரண்டு மனைவிகள். அவர் திடீரென இறந்துவிட, இளைய மனைவியையும் மகன் பார்த்தியையும் மகளையும் அவரது கடைசிக் காரியங்களில் அனுமதிக்க மறுக்கிறார்கள் மூத்த மனைவி செவனம்மாவின் அண்ணன் வீரத்தேவரும் அவரது வாரிசுகளும்.

ஆனால் தன் தம்பி பார்த்தி மீது பிரியமாக இருக்கும் மூத்தவளின் மகன் பூலோகம் அவனை அழைத்து வந்து சாப்பாடு போடுகிறான். அங்கே மாமன் மச்சான்களுக்குள் ஏற்படும் தகராறில் வீரத்தேவர் மகன் எதிர்பாராத விதமாக கொலையாகிறான்.

பார்த்தி தப்பி ஓட அவனை தேடிப்பிடித்துக் கொல்ல அலைகிறார்கள். அவனை திரும்பவும் ஊருக்குள் அழைக்க வலை விரிக்கிறார்கள். பார்த்தியும் வருகிறான். வீரத்தேவர் பழிக்குபழி வாங்கினாரா.. இல்லை பார்த்தி தப்பித்தானா என்பது தான் முடிவு.

தென்மாவட்டத்தில் ஒரு சமுதாயத்தில் இருக்கும் இரு குடும்பங்களிடையேயான பகைமையையும் அதில் ஒளிந்து இருக்கும் பழிவாங்கும் மூர்க்கத்தையும் ‘மதயானைக்கூட்ட’மாக காட்டியிருக்கிறார்கள். அதற்காக இன்னொரு சமுதாயம் எதையும் மையக்கதைக்குள் இழுக்காமல் விட்டதற்கு ஒரு சபாஷ்.

கதாநாயகன் பார்த்தியாக கதிர் கொடுத்த கேரக்டரை சரியாகத்தான் செய்திருக்கிறார். காதலைவிட ஆக்‌ஷனில் துடிப்பு தெரிகிறது. அவரது பெரிய கண்கள்தான் மைனஸ் என்றாலும் படத்திற்காக மொட்டையெல்லாம் அடித்திருக்கிறார். கடைசியில் விஜியின் கையை தட்டிவிடும் காட்சியில் பரிதாபத்தை அள்ளுகிறார்.

நர்ஸிங் மாணவியாக வரும் ஓவியாவுக்கு பிரச்சனையே இல்லாமல் காதலிக்கும் கேரக்டர். கேரளா சேச்சியாகவே வந்து அசத்தியிருக்கிறார். ஜெயக்கொடித்தேவராக வரும் முருகன் ஜீயின் அழுத்தமான நடிப்பும் வீரத்தேவராக வரும் வேலா ராமமூர்த்தியின் வன்மம் நிறைந்த நடிப்பும் படத்துக்கு பலம். வேலா ராம்மூர்த்தி இனி சினிமாவில் பிஸியாகிவிடுவார்.

படத்தின் கதைநாயகி என்றால் செவனம்மாவாக வரும் விஜிதான். அசத்திவிட்டார். கனிவைக்கூட கோபத்தோடு காட்டும் விஜி கடைசியில் தன நேர்மையை நிரூபிக்க எடுக்கும் முடிவு ‘திடுக்’ ரகம். ஆனால் அவர் தனது அண்ணனுடன் பேசும்போதெல்லாம் நம் மனதில் கிழக்கு சீமையிலே ராதிகா எட்டிப்பார்ப்பதை தவிர்க்க முடியவிலை.

பார்த்தியின் அண்ணனாக வருபவரின் சலம்பல்கள் ரசிக்க வைத்தாலும் அதுவே பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போடுபோது திகில் ஏற்படுகிறது. பொன்ராமாக வரும் மலையாள நடிகர் ஸ்ரீஜித்துக்குத்தான் சரியான வேலை கொடுக்காமல் விட்டுவிட்டார்கள்.

படத்தில் மூன்று பாடல்கள் இனிமை. அதில் இரண்டு பாடல்கள் காட்சியாக்கப்பட்ட விதத்தில் இசையமைப்பாளர் ரகுநந்தனும் ஒளிப்பதிவாளார் ராகுல் தருமனும் கைகோர்த்து செயல்பட்டிருக்கிறார்கள். கொஞ்ச நேரம் கேரளாவுக்குள் நம்மை சிலுசிலுவென்று அழைத்துச் சென்றுவரும் வேலையையும் ராகுல் தருமனின் கேமரா சரியாகச் செய்திருகிறது. சேசிங் காட்சிகளில் பின்னணி இசை சரியாக கோர்க்கப்பட்டிருப்பது சிறப்பு.

ஒரு சாவு காரியம் நடக்கும் வீட்டில் ஆரம்பித்த கதையை இன்னொரு சாவு காரியத்தின்போது முடித்திருப்பதே வித்தியாசமாக இருக்கிறது தென் மாவட்டத்தில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு சிலரின் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை இதைவிட டீடெய்லாக யாரும் இதற்குமுன் சொன்னதில்லை. மற்றபடி அடுத்து என்ன நடக்கும் என்ற டென்ஷனோடு கதையை நகர்த்தியிருப்பதிலும் அதிர்ச்சியான முடிவைக் கொடுத்து அனுப்பியதிலும் சமரசம் செய்யாமல் படம் இயக்கியுள்ளார் விக்ரம் சுகுமாறன்.

Leave A Reply

Your email address will not be published.