நஸ்ரியாவைப் போல தேவையில்லாமல் பிரச்சனைகளை தன்மீது லட்சுமி மேனன் இழுத்துப்போட்டுக்கொள்வது இல்லை. அதற்காக குடும்பப்பாங்கான நடிப்பு என்ற தன் கொள்கையில் இருந்து இறங்கிவரவும் இல்லை. இந்த பாலிசி தான் அவருடைய கால்ஷீட் டைரியை எப்போதும் ஃபுல்லாகவே வைத்திருக்கிறது.
சித்தார்த்துக்கு ஜோடியாக ‘ஜிகர்தண்டாவிலும், மஞ்சப்பை படத்தில் விமலுக்கு ஜோடியாகவும் நடித்துவரும் லட்சுமி மேனன் விஷாலின் அடுத்த படமான ‘நான் சிவப்பு மனிதனிலும் ஜோடி சேர்ந்திருக்கிறார். மேலும் விஜய் சேதுபதியுடன் வசந்தகுமாரன், கௌதம் கார்த்திக்குடன் சிப்பாய்’ என மொத்தம் அரை டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார். இதுதவிர ராதாமோகனும் நடிகர் பிருத்விராஜும் நான்காவது முறையாக மீண்டும் கைகோர்க்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க லட்சுமி மேனனை அணுகியிருக்கிறார்கள். ஆனால் இங்கே தமிழில் அல்ல. மலையாளத்தில்.
போகிற போக்கில் தனுஷுடன் ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என தன் ஆசையை வெளிப்படுத்த, தனுஷும் அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். கூடிய விரைவில் இதற்கான அறிவுப்பு வரலாம். அதிர்ஷ்டக்காற்று தன் பக்கம் வீசும்போதே அதை சரியான முறையில் பயன்படுத்த தெரிந்த நடிகை என்பதற்கு லட்சுமி மேனனைத்தவிர வேறு சிறந்த உதாரணம் சொல்லமுடியுமோ?