தற்போது இந்தியாவில் வாழும் உலகளவிலான ஜாம்பவான்களின் விருதுக்கான என்.டிடி.வி அறிவித்துள்ள 25 பேர்கள் அடங்கிய பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் நமது சூப்பர்ஸ்டார். ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல.. தமிழக மக்களும் சேர்ந்து காலரை தூக்கிவிட்டுக்கொள்ள வேண்டிய விஷயம் இது. உண்மையில் இந்த விருதுக்கு அவர் தகுதியான நபர்தான் என்பதில் எந்த ஐயமுமில்லை.
இந்த விருது அறிவிக்கப்பட்டதும் ரொம்பவே நெகிழ்ந்துபோனார் ரஜினி. இந்த விருதை நேற்று நடந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் கைகளல் பெற்றுக்கொண்ட ரஜினி, இதுபற்றி கண்கள் பனிக்க பேசும்போது, “நிறைய பேர் அதிசயம் நடக்கும் என்பதை நம்பமாட்டார்கள். ஆனால் அதிசயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த எனக்கு இவ்வளவு பெரிய விருதும் அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது என்றால் அது அதிசயம் அல்லாமல் வேறென்ன?”
“சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த எனக்கு தாயாகவும் தந்தையாகவும் இருந்த வளர்த்து ஆளாக்கிய என் அண்ணன் சத்யநாராயணாவுக்கும் எனது குருநாதர் பாலசந்தருக்கும், தங்களது அன்பால் என்னை இந்த உயரத்திற்கு கொண்டுவந்த தமிழக மக்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிகிறேன்” என்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கூறியுள்ளார் ரஜினி.
ரஜினியின் பிறந்தநாள் பரிசாக அவருக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கௌரவம் இது. ரஜினியுடன் அமிதாப், ஷாருக்கான், ஏ.ஆர்.ரஹ்மான், சச்சின் டெண்டுல்கர் ஆகியொரும் இந்த விருதுப்பட்டியலில் அடங்குவார்கள்.