
வாவ்.. வாவ்… வாவ்.. பல சிக்கல்களையும் தடைகளையும் கடந்து காலம் கடந்து வந்தாலும் தன்னை எதிர்த்தவர்களையும் தன்மீது புழுதிவாரி தூற்றியவர்களின் விமர்சனங்களையும் தவிடுபொடி ஆக்கியிருக்கிறான் இந்த கோச்சடையான்.
கதை…?
தந்தையின் சபதத்தை தனயன் நிறைவேற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஒன்லைன் தான் படத்தின் கதை. கலிங்கபுரி நாட்டின் படைத்தளபதியாக இருக்கும் ராணா, அங்கே அடிமைகளாக இருக்கும் கோட்டைபட்டிணத்து வீரர்களை மீண்டும் படையில் சேர்த்து கோட்டைபுரத்துக்கு எதிராகவே படையெடுக்க செய்யலாம் என அந்நாட்டு மன்ன்னுக்கு யோசனை சொல்கிறான். கலிங்கபுரி மன்னனும் அதற்கு சம்மதிக்க கோட்டை பட்டிணத்தின் மீதுபடையெடுத்து செல்கிறான் ராணா. அங்கேதான் நிகழ்கிறது திருப்பம்.
கோட்டைபட்டிணம் சென்றதும் கலிங்கபுரிக்கு எதிராக திரும்பும் ராணா தன் படையிலிருக்கும் தான் மீட்டுவந்த வீரர்களை கோட்டைபட்டிணத்து படையுடன் இணைக்கிறான்.. ராணாவின் இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன..? விரிகிறது கோச்சடையான் ரணதீரனின் வீரதீர சரித்திரம்.
முன்பு ராணாவின் தந்தை கோச்சடையான் ரணதீரனுக்கு கோட்டைபுரத்து மன்னன் வழங்கிய முறையற்ற மரண தண்டனைக்கு பழிதீர்க்க இறங்குகிறான் ராணா.. அவனையும் சிறையில் அடைத்துவிட்டு கலிங்கபுரி இளவரசனுக்கு ராணாவை காதலிக்கும் தன் மகளை மணம் முடித்து சமரசம் ஆக நினைக்கிறான் மன்னன். இதை முறியடித்து ராணா எப்படி தனது நாட்டின் கௌரவத்தையும் தனது காதலியையும் மீட்கிறான் என்பதுதான் அதிரவைக்கும் இரண்டாம் பகுதி.
பொம்மை படமாமே.. ரஜினி வெறும் ஐந்து நாள் மட்டும் தான் நடித்திருக்கிறாராமே.. என புரளி பரப்பிய வீணர்களுக்கு தனது வாளால் பதில் சொல்லியிருக்கிறார் கோச்சடையான் @ சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். கோச்சடையான், ராணா, சேனா என மூன்று வேடங்கள் ரஜினிக்கு.
இதில் கோச்சடையானின் சிவதாண்டவத்தையும் அவரது மகன் ராணாவின் ருத்ரதாண்டவத்தையும் கண்குளிர காணும் நமக்கு க்ளைமாக்ஸில் மட்டுமே வரும் சேனாவின் ஆட்டத்தை காணமுடியாதது மட்டும் தான் வருத்தமே தவிர படம் முழுவதும் கோடை இடியாய் குமுறியிருக்கிறார் சூப்பர்ஸ்டார்.
குறிப்பாக ஃப்ளாஸ்பேக்கில் வரும் கோச்சடையான் ரஜினி உக்கிரம். ரஜினியை ஒரு வரலாற்று படத்தில் பார்ப்பதே அவ்வளவு இனிமையாக இருக்கிறது.
ஆதி, சரத்குமார், நாசர், ஜாக்கிஷெராப், தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மிணி, சண்முகராஜன் என அனைவருமே அனிமேஷன் உருவங்கள் எனபதை மறைத்து நம் கண்முன்னே ஒரிஜினலாகவே நடமாடியிருக்கிறார்கள். அனைவரின் உழைப்பையும் தனித்தனியாக பாராட்டுவதை விட மொத்தமாக பாராட்டுவதே சிறந்தது.
அருமையான கதை, அதற்கு தெளிவான திரைக்கதை, கூர்தீட்டிய வசனங்கள் என கே.எஸ்.ரவிகுமார் தனது நண்பரின் படத்திற்கு சரியான பங்களிப்பை நூறு சதவீதத்திற்கும் அதிகமாக பதிவு செய்திருக்கிறார். கூடவே பின்னணி இசையில் ஏ.ஆர் ரகுமானும் கைகொடுக்க படம் நகருவதே தெரியவில்லை.
மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் உருவாகியிருக்கும் அனிமேஷன் படம் என்றாலும் படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் அதையெல்லாம் மறக்கவைத்து நம்மை கலிங்கபுரிக்கும் கோட்டைபட்டிணத்துக்கும் அழைத்துச் சென்றுவிடுகிறார் படத்தின் இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின் ரஜினிகாந்த்.
முதல்படம் என்றாலும் அவரது இத்தனை வருட உழைப்புக்கு, மெனக்கெடலுக்கு சரியான பலனும் உரிய அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது.. ரஜினியை ஒரு புதிய பரிமாணத்தில் காட்டியதற்காகவே ஹேட்ஸ் ஆஃப் சௌந்தர்யா..
கோச்சடையான் – ஒரு சரித்திரப் பதிவு.
Comments are closed.