‘கத்தி’ பிரச்சனை முடிவுக்கு வருகிறதா..?

65

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘கத்தி’ திரைப்படம், லைகா புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் இங்கிலாந்து வாழ் இலங்கைத் தமிழரான சுபாஷ்கரன் அல்லிராஜா என்பவரின் லைகா மொபைல் நிறுவனத்தின் சார்பு நிறுவனமாகும்.

ஆனால் லைகா நிறுவனத்தில், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் முதலீடு இருப்பதாக கூறி ‘கத்தி’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக்கூடாது என்று கூறி பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. இந்த நிலையில் தங்கள் மீது எழுந்த குற்றச்சாட்டை அந்த நிறுவனம் மறுத்துள்ளது.

நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அந்நிறுவத்தினர் கூறியுள்ளனர். தன்மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அல்லிராஜா மறுத்துள்ளார்.

“அரசியலுக்கு அப்பாற்பட்டவன் நான். ராஜபக்சே பணம் கொடுத்துதான் படம் தயாரிக்க வேண்டும் என்ற நிலையில் நாங்கள் இல்லை. எங்கள் நிறுவனத்தின் இரண்டு நாட்கள் லாபத்தில், ஒரு தமிழ் படத்தை தயாரித்துவிட முடியும். எங்களுக்கு 3 பில்லியன் யூரோ அளவிற்கு வியாபாரம் இருக்கிறது. எங்களுக்கு ஏன் ராஜபக்ச பண உதவி செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. ‘கத்தி’ படத்தை யாருக்கும் கொடுத்துவிடும் எண்ணமில்லை” என்று கூறினார்.

மேலும், ‘கத்தி’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இதுகுறித்து போராடும் அமைப்புகளை விரைவில் சந்தித்து பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இருப்பதாகவும், திரைப்படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தால் அதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

Comments are closed.