கலைப்புலி தாணு வெளியிடும் சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘நேர் எதிர்’

75

ஒருவனைப் பற்றி உலகில் மற்றவர் நினைத்து நம்பி இருக்கும் எண்ணத்துக்கு ‘நேர் எதிர்’ ஆக அவன் இருக்கிறான். இந்த சுபாவ முரண்பாடுகளை எடுத்துக்கொண்டு சுவாரஸ்யப்படுத்தி உருவாகியுள்ள படம்தான் ‘நேர் எதிர்’.

ஐந்து முக்கிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப்படத்தில் ரிச்சர்ட், வித்யா, ஐஸ்வர்யா, எம்.எஸ்.பாஸ்கர், இவர்களுடன் பார்த்தி என்பவர் அறிமுகமாகிறார். கேயாரிடம் 12 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் கொண்ட எம்.ஜெயபிரதீப் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ‘கனிமொழி’ ‘லீலை’ படங்களுக்கு இசையமைத்த சதீஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

அது என்ன ‘நேர் எதிர்’? வழக்கமான நாயகன் வில்லன் மோதலா என்றால் மறுக்கிறார் இயக்குநர். “உலகில் எல்லா விலங்குகளும் அதனதன் சுபாவத்தில் சரியாகவே இருக்கின்றன. ஆனால் மனிதன் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருக்கிறான். எல்லா விலங்குகளின் குணத்தையும் தன்னுள்ளே கொண்டவனாக இருக்கிறான். அதேபோல படத்தில் வரும் 5 கதாபாத்திரங்களில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று புரியாதபடி காலம் நடத்தும் ஆட்டம்தான் திரைக்கதை. இன்றைய யதார்த்த உலகில் நாகரிகம் என்ற பெயரில் நடக்கும் கூத்துகளும் போக்குகளுமே கதைப் பின்னணி” என்கிறார் ஜெயபிரதீப்.

ஒரு முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘நேர் எதிர்’ படத்தின் கதை முழுக்க முழுக்க இரவிலேயே நடக்கிறது. படத்தின் ஒரு காட்சி கூட பகலில் எடுக்கப்படவில்லை.

மூவி ஹவுஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள ‘நேர் எதிர்’ படத்தை பார்த்த கலைப்புலி எஸ்.தாணுவுக்கு படம் பிடித்துப்போகவே தனது வி.கிரியேஷன்ஸ் சார்பில் வாங்கி வெளியிடுகிறார். படம் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.