இந்தியாவில் இதுவரை ஆயிரக்கணக்கான என்கவுன்டர்கள் நடைபெற்றுள்ளது. ஒருபுறம் பெருங்குற்றங்களில் இருந்து நாட்டைக் காப்பாற்ற என்கவுன்டர் தேவை என போலிஸ் தரப்பில் வாதாடப்பட்டுக் கொண்டு வருகிறது. மறுபுறம் மனித உரிமை ஆர்வலர்கள் என்கவுன்டர் செய்வதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த வருடம் சென்னையில் வேளச்சேரியில் நடைபெற்ற என்கவுன்டர் சம்பவம் பரபரப்பான விவாதங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியது. என்கவுன்டர் மனித உரிமை மீறலா இலையா என்ற கேள்விக்கு ஒரு தீர்வாகத்தான் உருவாகி வருகிறது ‘வேளச்சேரி’ என்கிற திரைப்படம்.
இந்தப்படத்தில் சரத்குமார் என்கவுன்டர் ஸ்பெசலிஸ்டாக நடிக்க, இனியா வழக்கறிஞர் ஆக நடிக்கிறார். இனியா மனித உரிமை ஆர்வலராக இருந்து கொண்டு என்கவுன்டரை எதிர்ப்பதும் சரத்குமார் ரௌடிகளைப் போட்டுத் தள்ளுவதுமாக கதை விறுவிறுவென பின்னப்பட்டுள்ளது. மிகப்பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் ‘வேளச்சேரி’ படத்தில் சரத்தின் ஆக்ஷன் எபிசோடுகள் ஹாலிவுட்டுக்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
படத்திற்கு தாஜ்நூர் இசையமைக்க, வசனத்தை எழுதுகிறார் ‘சூதுகவ்வும்’ சீனிவாசன். கதை திரைக்கதை அமைத்து இயக்குகிறார் திருமலை வேந்தன். சென்னை, கோவா ஆகிய இடங்களில் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.