அம்மாவை இழந்த மகேஷ், தனது தந்தை மற்றும் சித்தியுடன் இருந்துகொண்டே கல்லூரிக்கு படிக்க செல்கிறார். சித்தி அவரை வெறுத்து திருட்டுப்பட்டம் சுமத்துவதால், வீட்டை விட்டு வெளியேறும் மகேஷுக்கு அனன்யாவை கண்டதும் காதல் வருகிறது. ஒருகட்டத்தில் மேஜிக் ஷோ நடத்தி மக்களின் கவனத்தை திசைதிருப்பி கொளையடிக்கும் கும்பலில் இவர் சேர்கிறார். இந்த கும்பலுக்கு உடந்தையாக இருந்து சம்பாதிக்கிறார் போலீஸ் அதிகாரி வெங்கடேஷ்.
அனன்யா மகேஷை பார்க்கவில்லை என்றாலும் அவர் செய்யும் நல்ல விஷயங்களால் அவரை காதலிக்க முன்வருகிறார். இன்னொரு பக்கம் மகேஷை திருடன் என மாட்டிவிட, போலீசில் இருந்து தப்பிக்கும் மகேஷ் அனன்யாவுக்கு எப்படி உண்மையை புரியவைப்பது என குழம்புகிறார். இந்த நேரத்தில் அனன்யாவின் அண்ணி
இந்த திருட்டுக்கும்பலில் சிலரால் கொல்லப்படுகிறார்.
இதைத்தொடர்ந்து இந்த திருட்டுக்கும்பலில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளேயே தவறாக புரிந்துகொண்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மடிகின்றனர். இதற்கெல்லாம் மூலகாரணம் மகேஷ் தான் என தெரியவரும் போலீஸ் அதிகாரி வெங்கடேஷ், மகேஷை என்கவுண்டரில் போட்டுத்தள்ள முயற்சிக்கிறார். அதில் மகேஷ் சிக்கினாரா? அவர் திருட்டுக்கும்பலில் சேர்ந்தது ஏன்..? எதனால் திருட்டுகும்பலை அழிக்கிறார் என்பது தான் படத்தின் மைய முடிச்சு.
ஒரு ஹீரோ படத்திற்கு தேவை என்கிற அளவில் தான் அங்காடித்தெரு மகேஷ் நடித்திருக்கிறாரே தவிர கதாபாத்திரத்திற்கு, குறிப்பாக ஆக்சனுக்கு கொஞ்சமும் பொருந்தவில்லை. யுவராணியின் இடுப்பை கிள்ளுவதெல்லாம் ரொம்பவே ஓவர். அனன்யாவின் நடிப்பில் எந்த குறையும் சொல்ல முடியவில்லை. ஆனால் பல இடங்களில் அவரும் வெறும் பொம்மையாகவே வந்து செல்கிறார். காமெடி ஜெகன் படத்தை கொஞ்சம் கலகலப்பாக நகர்த்தி செல்கிறார்.
போலீஸ் அதிகாரியாக மிரட்டல் வில்லத்தனம் காட்டியிருக்கிறார் ஏ.வெங்கடேஷ். நகைப்பைத்தியமான அவர் கழுத்து முழுவதும் நகைகளாக அணிந்து தன்னை அழகு பார்த்துக்கொள்வது சூப்பர். நடுத்தர வர்க்கத்தின் இயலாமை காரணமாக அவர்களை குறிவைத்து திருடும் கூட்டங்கள் இருக்கிறது என்பதையும், அதற்கு காவலர்கள் சிலரே உடந்தையாக இருபதையும் வெளிச்சம்போட்டு காட்டி பொதுமக்களை எச்சரிக்கை செய்திருக்கிறார் இயக்குனர் பாலஸ்ரீராம்.
Comments are closed.