கிராமத்தில் அரிசி மில் நடத்திவரும் முதலாளி ஆடுகளம் நரேனின் மகள் மகிமா. பிறக்கும்போதே தாயை பறிகொடுத்த அவள் தான் அவரது உயிர். நரேனின் விசுவாசமான வேலைக்காரன் வர்மா. ஒருகட்டத்தில் விபத்தில் இருந்து மகிமாவை காப்பாற்ற, அவனை தனக்கு ஆஸ்தான ட்ரைவராக நியமிக்கிறார் நரேன்.
வர்மாவுக்கு நிச்சயித்த பெண் வேறு ஒரு மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ள, இங்கோ தன்னை காப்பாற்றிய வர்மா மீது காதல் வயப்படுகிறார் மகிமா. ஆனால் வர்மாவோ இது தவறு என விலகிச்செல்கிறார். இந்த நேரத்தில் தனது மகனுக்கு மகிமாவை பெண்கேட்டு வந்து நிச்சயதார்த்தம் நடத்துகிறார் கோடீஸ்வரி நளினி.
ஊருக்குள் நரேனின் எதிராளியாக இருக்கும் ஆதிலிங்கம் மகிமா, வர்மா இருவரையும் பற்றி தவறான தகவல்களை பரப்ப ஆள் அனுப்புகிறார். இதனை கண்டுபிடித்துவிட்டாலும், இனி இதுபோன்ற பேச்சு வராமல் இருக்க, திருமணம் முடியும் வரை வர்மாவை ட்ரைவர் வேலைக்கு வரவேண்டாம் என நரேனை சொல்லச்சொல்கிறார் நளினி.
அவர் சொல்லும் முன்னே இதை புரிந்துகொண்ட வர்மா, தன்னால் மகிமாவின் திருமணத்திற்கு இடைஞ்சல் வந்துவிடக்கூடாது என ஊரைவிட்டு கல்குவாரி வேலைக்கு கிளம்பி செல்கிறார். ஒருவருடம் கழித்து தாயை பார்க்க ஊருக்கு வரும் வர்மா ஊருக்குள் பார்க்கும் காட்சி அவரை அதிர்ச்சியடைய வைக்கிறது. அப்படி என்ன நடந்தது என்பது க்ளைமாக்ஸ்.
வர்மாவாக புதுமுகம் ஆதி, கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். குத்துப்பாட்டு, நண்பர்களுடன் தண்ணியடித்து சுற்றுவது என்றில்லாமல் தனது கதாபாத்திரம் உணர்ந்து நடித்திருப்பது அவரது கேரக்டரின் கண்ணியத்தை கூட்டுகிறது. அன்பு மகளாக மகிமாவும் குறைவைக்கவில்லை. பாசத்தந்தையாக ஆடுகளம் நரேனும் குறைவைக்கவில்லை.. காமெடி என்கிற பெயரில் பிளாக் பாண்டி படுத்தி எடுக்கிறார். மரியா மனோகரின் இசையில் ‘அடியே காதலியே’ பாடல் சுகம்.
படத்தை இயக்கியுள்ள உ.பி.மருது, ஒரு பீல்குட் படமாக இயக்கியிருந்தாலும் பதினைந்து வருடங்களுக்கு முன் வெளியான ஒரு படத்தின் சாயல் படம் முழுவதும் பலமாகவே இருப்பதை இயக்குனரும் தயாரிப்பாளரும் கவனித்தார்களா, கவனிக்காமல் விட்டார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனால் படமாக பார்க்கும்போது ரசிகர்களை உறுத்தாத ஒரு படம் என தாராளமாக சொல்லலாம்.
Comments are closed.