நடிகர்கள் : விஷால், அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஜெயபிரகாஷ், தம்பி ராமையா
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம்.நாதன், அபிநந்தன்
இயக்கம் : விஷால்
தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ்
மெடிக்கல் ரெப்பாக பணியாற்றும் விஷால் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். குறைவான சம்பளம் என்றாலும் அவரது குடும்பத்தார் கார் வாங்க ஆசைப்படுகிறார்கள். அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் விஷால் தோல்வியடைய இறுதியில் பழைய கார் ஒன்றை வாங்குகிறார். அந்த காரே அவரது குடும்பத்திற்கு ஆபத்தாக முடிகிறது. திடீரென்று வரும் கும்பல் ஒன்று விஷால் குடும்பம் மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது. இதில், விஷாலின் மனைவியும், மகளும் இறக்கிறார்கள். அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்கும் விஷால், இந்த தாக்குதலுக்கு காரணம் தனது தந்தை தான் என்று நினைத்து அவர் மீது ஆத்திரப்படுகிறார். விஷாலின் தந்தை யார் ?, அவர் மீது விஷால் கோபமாக இருப்பது ஏன் ?, இந்த தாக்குதலுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு ? ஆகிய கேள்விகளுக்கான பதில் தான் ‘மகுடம்’ படத்தின் கதை.
விஷால் இரண்டு வேடங்களில், மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். மகன் விஷால் வழக்கம் போல் சாதாரணமாக இருந்தாலும், அவர் தான் ரசிகர்களை ஆறுதல் படுத்தும் விதத்தில் நடித்திருக்கிறார். முதல் முறையாக வயதான கெட்டப் போட்டிருக்கும் விஷால், தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் முதுமையை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அப்பா விஷாலின் இளமை பருவம் மற்றும் முதுமை பருவம் என இரண்டு விதமான கெட்டப்பும் கலர்புல்லாகவும், கலவரமாகவும் இருக்கிறது.
நாயகிகளாக நடித்திருக்கும் அஞ்சலி மற்றும் துஷாரா விஜயன் தங்களது வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள். அப்பா விஷாலுக்கு ஜோடியாக நடித்திருக்கும் அஞ்சலி, தனது ஆட்டம் மூலம் திரையரங்கையே ஆட வைப்பதோடு, அதிரடியான நடிப்பால் திரையரங்கையே அலர வைக்கிறார். மகன் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருக்கும் துஷா விஜயன், வழக்கம் போல் எளிமையான தோற்றம், இயல்பான நடிப்பு மூலம் தனது பணியை நிறைவாக செய்திருக்கிறார்.
ஜெயபிரகாஷ், ஜான் விஜய், தம்பி ராமையா, சித்ரா லட்சுமணன், வம்சி கிருஷ்ணா, சபுமோன் அபுசலிம், அஜய், அர்ஜய் பிரின்ஸ் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் அபிநந்தன் ஆகியோரது கேமரா மிக வேகமாக பயணித்திருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளை அமர்க்களமாக படமாக்கியிருப்பவர்கள், 80 காலக்கட்டங்களை அதிகப்படியான வண்ணங்களோடு காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் கமர்ஷியல் அம்சங்களோடும், பின்னணி இசை அதிரடி மற்றும் ஆரவாரமான காட்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையிலும் பயணித்திருக்கிறது. படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த், படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.
சவாலான கதையம்சத்தோடும், பணிச்சுமை அதிகம் இருக்கும் கதைக்களத்தோடும் இயக்குநராக பயணித்திருக்கும் விஷால், தனது ரசிகர்களோடு திரை ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் முயற்சியாக திரைக்கதையை கையாண்டிருக்கிறார்.
கமர்ஷியல் அம்சங்கள் அதிகமாகவும், ரசிக்கும்படியும் இருந்தாலும் சில காட்சிகள் மற்றும் நடிகர்களின் அதிகப்படியான நடிப்பால், முதல் பாதி படம் தொய்வடைந்து விடுகிறது. இருந்தாலும், இரண்டாம் பாதியில் ரங்கா கதாபாத்திரம் அறிமுகமாகும் போது ஜெட் வேகத்தில் பயணிக்கும் படம் தொய்வில் இருந்து மீண்டு கமர்ஷியல் ரசிகர்களை குஷிப்படுத்துகிறது.
சில குறைகள் இருந்தாலும், கமர்ஷியல் பட விரும்பிகளையும், ஆக்ஷன் பட விரும்பிகளையும் திருப்திப்படுத்தும் விதத்தில் படத்தை இயக்கியிருக்கும் விஷால், இரட்டை குதிரை சவாரியை தவிர்ப்பது நல்லது என்பதே தோன்றுகிறது.
ரேட்டிங் 3/5
Comments are closed.