இமான் படைக்கும் பொங்கல் விருந்து

90


‘ஜில்லா’ படத்தின் பாடல்கள் வரும் 21ஆம் தேதி வெளியாக இருக்கின்றன.‘தமிழன்’ படத்திற்கு பிறகு, விஜய் நடிக்கும் இந்தப்படத்திற்கு இமான் இசையமைப்பதால், அந்தப்படத்தைப்போலவே இதிலும் பாடல்கள் ஹிட்டாகும் என உறுதியாக நம்பலாம்.

படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. யுகபாரதி எழுதிய ஓப்பனிங் பாடலான ‘பாட்டு ஒண்ணு’ பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியனும் சங்கர் மகாதேவனும் இணைந்து பாடியிருக்கிறார்கள். அனேகமாக இது படத்தில் விஜய்யும் மோகன்லாலும் சேர்ந்து பாடும்படியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என தெரிகிறது.

‘வெரசா போகயிலே’, ‘எப்ப மாமா ட்ரீட்டு’ என இரண்டு பாடல்களை இமான் பாட, வைரமுத்து எழுதிய ‘கண்டாங்கி கண்டாங்கி’ என்ற பாடலை ஸ்ரேயா கோஷலுடன் சேர்ந்து பாடியிருக்கிறார் விஜய். 2002ல் வெளியான ‘யூத்’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து வைரமுத்து மீண்டும் விஜய்க்கு எழுதியுள்ள பாடல் இது என்பது ஸ்பெஷல்.

இந்தப்படத்தில் ‘ஜிங்குனமணி’, ‘எப்ப மாமா ட்ரீட்டு’ மற்றும் ஜில்லா தீம் பாடல் என மூன்று பாடல்களை எழுதியுள்ளார் விவேகா. விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் ஆகியோருடன் சேர்ந்து இமானின் இசை ‘ஜில்லா’வை சர்க்கரைப் பொங்கலாக ரசிகர்களுக்கு படைக்கப்போகிறது என்பது மட்டும் உண்மை.

Leave A Reply

Your email address will not be published.