உடல்தான் தளர்ந்திருக்கிறதே தவிர மனதும் பேச்சும் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறது இயக்குனர் பாலுமகேந்திராவிடம். இந்த வயதிலும் தான் இயக்கிவரும் ‘தலைமுறைகள்’ படத்தை மிக வேகமாக முடித்துவிட்டார் பாலுமகேந்திரா. தனது ‘கம்பெனி புரடக்ஷன்’ சார்பாக படத்தை தயாரித்திக்கிறார் இயக்குனர் சசிகுமார். மிகப்பெரிய நடிகர் பட்டாளம் இல்லையென்றாலும் அருமையான கதை இருக்கிறது என்கிறார் பாலுமகேந்திரா.
“ஆங்கிலத்திலேயே பேசி, படித்ததால் ஓரளவுக்கு மட்டுமே தமிழ் பேசத்தெரிந்த சிறுவன்… நான்கைந்து வார்த்தைகளுக்கு மேல் ஆங்கிலத்தில் பேசத்தெரியாத அவனது தாத்தா… இவர்கள் இருவருக்கும் ஏற்படும் அன்யோன்யம் தான் படத்தின் ஜீவநாடி” என்கிறார் பாலுமகேந்திரா.
தாத்தாவாக பாலுமகேந்திராவே நடித்திருக்கிறார் என்பது சிறப்பு. பேரனாக மாஸ்டர் கார்த்திக் நடித்திருக்கிறார். சசிகுமார் க்ளைமாக்ஸில் மட்டும் வந்துபோகும், ஆனால் கதைக்கு ஆணிவேரான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். ஒரு தயாரிப்பாளராக இருந்தும் படப்பிடிப்பின்போது எட்டிப்பார்க்காத சசிக்குமார், நடிப்பதற்காக, அதுவும் ஒரே ஒரு நாள் மட்டுமே படப்பிடிப்பிற்கு வந்தாராம்.
இந்தப்படத்திற்காக பழமையான வீடு ஒன்றை பாலுமகேந்திரா தேடியபோது சென்னையைத் தாண்டிய புறநகர்பகுதியான நசரத் பேட்டையில் அவர் எதிர்பார்த்த மாதிரியான வீடு கிடைத்தது. அந்த வீடு 250 வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டது என்பதை அறிந்ததும் “எனக்காகவா 250 வருடங்களாக காத்திருக்கிறாய் என அந்த வீட்டிடம் கேட்டேன்” என்கிறார் பாலுமகேந்திரா நெகிழ்ச்சியுடன்.
இந்தப்படத்திற்கு இளையராஜாதான் இசையமைக்கிறார். ஏன் தொடர்ந்து இளையராஜாவையே இசையமைக்க சொல்கிறீர்கள் என கேட்டால், “ஏன் மாற்றனும்?என்னோட மூணாவது படமான ‘மூடுபனி’யிலிருந்து இன்றுவரை என் படங்களுக்கு இளையராஜா தான் இசையமைக்கிறார். அவருடைய இசை என் படங்களில் ஒரு அங்கம். அதை ஒருபோதும் மாற்ற முடியாது. அவரை எதற்காகவும் விட்டுத்தர மாட்டேன்” என்கிறார் பாலுமகேந்திரா உணர்ச்சிப்பெருக்குடன்.