
நலன் குமாரசாமியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரவிகுமார், தான் இயக்கியுள்ள ‘நேற்று இன்று நாளை’ படத்தின் டைட்டிலுக்கு ஏற்ற பொருத்தமான கதைக்களத்தை தான் தேர்ந்தெடுத்துள்ளார். அதாவது கால எந்திரம் ஒன்றை தயார் செய்கிறார் விஞ்ஞானி ஒருவர். அதில் கதாநாயகன் விஷ்ணு, மியா, கருணாகரன் உட்பட மூன்று பேரும் ஏறி வெவ்வேறு காலகட்டத்திற்கு பயணிக்கிறார்கள். இதை வைத்து சுவாரஸ்யமாக கதை பின்னியிருக்கிறார்.
இதில் கடந்த கால பயணமும் உண்டு. எதிர் கால பயணமும் உண்டு… அதுமட்டுமல்ல ட்ரெய்லரில் விசித்திரமான ஒரு விஷயத்தை குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் ரவிகுமார். அதாவது கால எந்திரத்தில் வெவ்வேறு காலத்துக்கு பயணிப்பவர் யாராக இருந்தாலும் அந்த காலகட்டத்தில் தன்னைப் போன்ற தோற்றமுடைய நபர் யாராவது எதிர்ப்பட்டால் அவர்களை தொந்தரவு செய்யாமல் ஒதுங்கி சென்றுவிடவேண்டுமாம்.
அதற்கேற்ற மாதிரி படத்தில் கால எந்திரத்தில் பயணிக்கும் விஷ்ணு, இன்னொரு காலகட்டத்தில் வாழும் இன்னொரு விஷ்ணுவின் மீது மோதுவது போல காட்சியும் உண்டு. அட, இது என்ன புதிதாக இருக்கிறதே.. அப்படியானால் கதாநாயகி மியா, கூடவே வரும் கருணாகரன் இவர்கள் எல்லோருமே டபுள், ட்ரிபுள் ரோல் பண்ணியிருப்பார்களோ..?
இந்த சந்தேகத்தை இயக்குனர் ரவிகுமாரிடமே கேட்டோம்.. “முக்கியமான விஷயத்தை இப்பவே கேட்குறீங்களே பாஸ்.. அதாவது இந்த டைம் மெஷினில் ஒருத்தர், இருவர், ஏன் மூன்று பேர் கூட அமர்ந்து பயணிப்பது மாதிரியான வசதி உண்டு.. அதில் யார் யார் சேர்ந்து ஒவ்வொரு முறையும் பயணிக்கிறார்களோ அவர்களுக்கு அந்தந்த கால கட்டத்தில் இன்னொரு ரோலும் உண்டு.. அது டபுளா, அல்லது ட்ரிபுளா என்பது இன்னும் ரெண்டு நாளைக்காவது சஸ்பென்சா இருக்கட்டுமே சார்” என நைசாக நழுவுகிறார் ரவிகுமார். வரும் வெள்ளிக்கிழமை இந்தப்படம் திரைக்கு வருகிறது.
இப்படத்தை திருக்குமரன் என்டேர்டைன்மென்ட் சார்பில் சி வி குமார் தயாரிக்க அபி & அபி ஸ்டுடியோஸ் சார்பில் அபினேஷ் இளங்கோவன் வெளியிடுகிறார்.
Comments are closed.