டைட்டில் பிரச்சனை கோலிவுட்டை பொறுத்தவரை ஒரு தொடர்கதையாகவே மாறிவிட்டது என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. சமீபத்தில்தான் யுடிவி தயாரிப்பில் ஜனநாதன் இயக்கிவரும் ‘புறம்போக்கு’ படத்தின் டைட்டில் தனக்கு சொந்தமானது என ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ்(நட்டு) கூறியிருந்தார். ஆனால் யுடிவி நிறுவனமோ அந்த டைட்டில் தங்களுக்குத்தான் சொந்தம் என ஆதாராத்துடன் அறிவித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
தற்போது கௌதம் மேனன் படத்திற்கும் டைட்டில் வைத்ததில் இதேபோல ஒரு சிக்கல் எழுந்துள்ளது. கௌதம் தற்போது சிம்பு, பல்லவியை வைத்து தனது புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு, தான் இயக்கிய ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் பாடலில் இடம்பெற்ற ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற வார்த்தையைத் தான் டைட்டிலாக அறிவித்தார்.
ஆனால் தற்போது இந்தப்பெயரில் ஏற்கனவே ஒரு படம் உருவாகி இருப்பதாகவும் அந்தப்படத்தை எடுத்து முடித்து, சென்சார் சர்டிஃபிகேட் கூட வாங்கிவிட்டார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. எத்திராஜ், சரவணன் என்ற இருவர் அந்தப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.
இரண்டு படங்களும் வெறும் படப்பிடிப்பு நிலையில் இருந்தால்கூட ஒருவர் இன்னொருவருக்கு டைட்டிலை விட்டுக்கொடுக்க வாய்ப்பு இருக்கும். ஆனால் இங்கே சம்பந்தப்பட படம் அந்த டைட்டிலுடன் தணிக்கையும் செய்யப்பட்டு விட்டதால், கௌதம் மேனன் இனி வேறு டைட்டிலை தேடவேண்டிய நிலையில் இருக்கிறார்.