வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு குடும்ப மோதிரத்துடன் காதலனைத் தேடி தோழியுடன் ரயிலேறுகிறாள் கோமதி… காரணம் அந்தக் குடும்ப மோதிரத்தை தனது காதலனிடம் கொடுத்து தன் வீட்டிற்கு அனுப்பி பெண் கேட்கச்சொன்னால் செண்டிமெண்ட்டாக ஓகே சொல்லிவிடுவார்கள் என்பது அவள் நினைப்பு. இன்னொரு பக்கம் லம்ப்பாக பணத்தை ஆட்டையைப் போட்டுவிட்டு தன் தங்கை வீட்டிற்கு செல்வதற்காக நண்பனுடன் அதே ரயிலில் ஏறுகிறான் ஈஸ்வர்.
ஒரு களேபரத்தில் மோதிரத்தை ஒருவன் தட்டிக்கொண்டுபோக அவனிடம் இருந்து மோதிரத்தை ஈஸ்வர் மீட்டு வருவதற்குள் ரயில் கிளம்பி விடுகிறது. பணப்பை கோமதியுடன் போய்விட, மோதிரத்தை கொடுத்துவிட்டு அதன்மூலம் கோமதியை கண்டுபிடித்து பணத்தை வாங்கிவிடலாம் என நினைத்து ரயிலில் கோமதி சொல்லியிருந்த அவளது வீட்டைத் தேடி மோதிரத்துடன் செல்கிறார்கள் ஈஸ்வரும் நண்பனும்.
ஆனால் கோமதி கடிதத்தில் எழுதியிருந்தபடி மோதிரம் கொண்டுவருபவன் தான் அவன் காதலன் என்று நினைத்து இருவரையும் கொல்ல முடிவு செய்கிறார்கள் கோமதியின் அண்ணன்கள். ஒருகட்டத்தில் ஈஸ்வரின் மூலம் கோமதி கர்ப்பமாக இருக்கிறாள் என தவறுதலாக நினைத்துக்கொண்டு பாசக்காரர்களாக மாறி ஈஸ்வருக்கும் கோமதிக்கும் திருமணம் நடத்த முடிவு செய்கிறார்கள். அதன்பின் ஆரம்பிக்கிறது களேபரம்.. கோமதி அவளது காதலனுடன் இணைந்தாளா?ஈஸ்வர் மற்றும் அவன் நண்பனின் கதி என்ன ஆயிற்று என்பதுதான் க்ளைமாக்ஸ்.
ஈஸ்வர், கோமதியாக புதுமுகங்கள் வேலு மற்றும் அனஸ்வரா இருவரும் நடித்திருக்கிறார்கள். இதில் அனஸ்வராவை விட ஈஸ்வராக வரும் வேலுவுக்குத்தான் நடிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. அவரும் ஓரளவு அதை பயன்படுத்தியிருக்கிறார்.
ஹீரோவுக்கு இணையாக ஒரு காட்சியில்கூட அவரைவிட்டு பிரியாத நண்பனாக வருகிறார் பாலா. படத்தில் முக்கால்வாசி வசனங்களை இவர் ஒருத்தர் மட்டுமே பேசுகிறார். அதுவும் ஹை டெசிபலில்.. தியேட்டரைவிட்டு வெளியே வந்தபின்னும் சத்தம் நம் காதுகளில் கேட்பதுபோல உணர்வு ஏற்படுகிறது.
ஒரே ஒரு பாடல்தான் என்பதால் அன்புச்செல்வன் இசை பற்றியும், எண்பது சதவீத படப்பிடிப்பு ஒரே பங்களாவிற்குள் தான் என்பதால் வசந்த்தின் ஒளிப்பதிவிலும் சொல்லிக்கொள்ளும்படி புதுமைகள் எதுவும் இல்ல.
தனது சூடான விமர்சனங்கள் மூலம் தமிழ்ப்படங்களை கிழித்து தோரணம் கட்டித் தொங்கவிடும் இணையதள விமர்சகர், எழுத்தாளர் கேபிள் சங்கர் முதன்முதலாக இந்தப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். கேபிள் வயரைப்போலவே வசனங்களும் ரொம்பவே நீளம். சில நேரங்களில் காமெடியன் பாலா பேசும் வசனங்களை கேட்கும்போது ‘கனாக்காணும் காலங்கள்’ சீரியல் பார்ப்பது போன்ற பிரம்மை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
படத்தை இயக்கி இருக்கும் சக்திவேல் முழுப்படத்தையும் காமெடியாக கொண்டுசெல்ல முயற்சி செய்திருக்கிறார். அதற்கேற்ற மாதிரி கேரக்டர்களை தேர்ந்தெடுத்தும் இருக்கிறார். ஆனால் ஒரே இடத்தில் நகரும் கதை தான் ஸ்லோவாக நகர்ந்து நம்மை சோதிக்கிறது.
கதாநாயகியின் வீட்டில் இருப்பவர்களை, அதிலும் ஒரு போலீஸ்காரர் உட்பட அனைவரையும் முட்டாளாக காட்டியிருப்பது திரைக்கதையின் பலவீனம். அதேபோல கதாநாயகனும் கதாநாயகியும் தாங்கள் சொல்லவந்ததை முழுதாக சொல்லவோ, அல்லது கதாநாயகியின் குடும்பத்தில் உள்ள ஒருவராவது என்ன நடந்தது என்று தெளிவாக கேட்டுத் தெரிந்துகொள்ளவோ, படத்தின் இயக்குனர் எந்த இடத்திலும் வாய்ப்பு தராதது மிகப்பெரிய உறுத்தல். அதிலும் கதாநாயகியின் குடும்பத்தில் உள்ள அனைவரும் நேற்று வந்த ஒருத்தன் பேச்சை கேட்பதும் தங்களது வீட்டுப்பெண்ணின் பேச்சை நம்பாததும்……
ஓகே.. லாஜிக்கை தவிர்த்துவிட்டு பார்த்தால் பல இடங்களில் சிரிக்க வாய்ப்பு இருக்கிறது, பார்த்துவிட்டு வந்து சொல்லுங்கள்.