பிரிக்க முடியாதது ‘ஷங்கரும் ரயிலும்’

49

பிரிக்க முடியாதது எது என திருவிளையாடல் பாணியில் கேட்டால் சினிமாவை பொறுத்தவரை ‘ஷங்கரும் ரயிலும்’ என்ற பதில்தான் சரியாக இருக்கும். ஜென்டில்மேனில் ஆரம்பித்த இந்த ரயில் செண்டிமெண்ட் தற்போது அவர் இயக்கிவரும் ‘ஐ’ படம் வரை தொடர்வது உண்மையில் அதிசயம்தான். ஷங்கரின் ரயில் பயணங்களை அப்படியே கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாருங்கள்.

ஜென்டில்மேனில் ‘சிக்குபுக்கு ரயிலே’ பாடல் படமாக்கப்பட்டது ரயிலில்தான். ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த் (இன்னொரு)ஐஸ்வர்யாராயை முதன்முதலில் பார்ப்பது ரயிலை விட்டு இறங்கும்போதுதான். அந்நியனில் விக்ரம் குரூப் திருவையாறு போகும்போது அடிக்கும் கலாட்டாக்களும் க்ளைமாக்ஸும் படமாக்கப்பட்டது ரயிலில்தான்.

சூப்பர்ஸ்டார் படங்களிலும் கூட இந்த ரயில் செண்டிமெண்ட்டை தொடர்ந்தார் ஷங்கர். சிவாஜி படத்தில் ரயில் வரும்போது தண்டவாளத்தின் நடுவில் ரஜினியை நிற்கவைத்து அவரது காதலை சக்சஸ் பண்ணவைப்பார். எந்திரனில் ரவுடிகளிடம் இருந்து ஐஸ்வர்யாராயை காப்பற்ற ரோபோ ரஜினி போடும் அந்த ரயில் சண்டைக்காட்சி படத்தின் ஹைலைட்டுகளில் ஒன்று. விஜய் நடித்த நண்பன் படத்தில் ஒரு முழு ரயிலுக்கே பெயிண்ட் அடித்து பாடல்காட்சியை படமாக்கினார் ஷங்கர்.

தற்போது விக்ரமை வைத்து இயக்கிவரும் ‘ஐ’ படத்திலும்கூட ரயில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக பங்கேற்கிறது. கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ரயில் நிலையத்திலும் ரயிலிலும் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருப்பதால் ரயில்வே நிர்வாகத்தின் அனுமதிக்காக காத்துக்கொண்டிருக்கிறாராம் ஷங்கர். தொடரட்டும் ஷங்கரின் ரயில் பயணங்கள்.

Leave A Reply

Your email address will not be published.