‘டான் ஸ்டுடியோ’ – சென்னையில் முதன்முதலாக 3டி புரொஜக்‌ஷனுடன் டப்பிங் தியேட்டர்

81

சென்னை தி.நகர் வடக்கு போக் சாலையில், ‘ரெஸிடன்ஸி டவர்’ நட்சத்திர ஹோட்டலுக்குப் பின்புறம், ‘டான் ஸ்டுடியோ’ எனும் பெயரில் புதிதாக ஒரு எடிட்டிங், டப்பிங் மற்றும் ரெக்கார்டிங் தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது.

அவ்வளவாக விழாக்களில் தலைகாட்டாத பின்னணிப்பாடகி எஸ்.ஜானகியம்மா இதன் திறப்புவிழாவில் கலந்துகொண்டு ‘ரெட் சூட்’ எனும் 3டி புரொஜக்‌ஷன் டப்பிங்- ரெக்கார்டிங் ஸ்டுடியோவை திறந்து வைத்ததோடு ‘காதல் ஓவியம்’ திரைப்படத்தில், அவர் பாடி, மெகா ஹிட் அடித்த ‘நாதம் என் ஜீவனே…’ பாடலின் ஒருசில வரிகளைப் பாடிவிட்டு, ஒரு விநாயகர் துதியையும் பாடி, விழாவில் கலந்துகொண்டோரை மெய்சிலிர்க்க வைத்தார்.

இதேபோல கிரீன் சூட் எடிட்டிங் ஸ்டுடியோவை திறந்துவைக்க பச்சை வண்ண உடையில் நடிகர் விஜய் சேதுபதியும், ப்ளூ சூட் எடிட்டிங் ஸ்டுடியோவை திறந்துவைக்க நீலநிற உடையில் இயக்குனர் ராமும் வந்திருந்தது ஆச்சர்யம்.

என்னென்ன வசதிகள்?
‘ஆர்.ஜி.பி’ (RGB) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பிரைமரி வர்ணங்களை எண்ணத்தில் கொண்டு ரெட் சூட், கிரீன் சூட், ப்ளூ சூட் என மூன்று பிரதான வண்ணங்களில் அழகு மிளிரும் இந்த ’டான் ஸ்டுடியோவுக்குள் மூன்று பிரமாண்ட எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டர்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எதற்காக ‘ஆர்.ஜி.பி’?
‘ஆர்.ஜி.பி’ எனப்படும் சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று அடிப்படை வண்ணங்களை சரிவிகிதத்தில் ஒன்று சேர்த்தால், பால் வெண்மை உருவாகும். அதனடிப்படையில்தான் இந்த ‘டான் ஸ்டுடியோ’வின் வராண்டாவை வெண்மை நிறத்திலும், ஹெச்.டி-3டி புரொஜக்‌ஷன் வசதியுடைய டப்பிங்-ரெக்கார்டிங் ஸ்டுடியோவை ‘ரெட் சூட்’ எனும் சிவப்பு நிறத்திலும், ‘கிரீன் சூட்’ எனும் பெயரில் ஒரு எடிட்டிங் ஸ்டுடியோவை பச்சை வண்ணத்திலும், மற்றொரு எடிட்டிங் அறையை ‘ப்ளூ சூட்’ எனும் பெயரில் நீலவண்ணத்திலும் வடிவமைத்துள்ளார்கள்.

படுத்துக்கொண்டே டப்பிங் பேசலாம்
‘பொதுவாக இதுமாதிரி டப்பிங் ஸ்டுடியோக்களில் இடவசதி மிகவும் குறைவாக இருக்கும். ஆனால் இங்கே ஒரு ‘ட்ரெட் மில்’லைப் போட்டு, அதில் நடந்தும் ஓடியும் டப்பிங் பேசும் வசதிகளையும், ஒரு படுக்கையைப் போட்டு அதில் படுத்தபடி படுக்கைக்காட்சிகளில் டப்பிங் பேசும் அளவிற்கும் ‘டான் ஸ்டுடியோ’வின் இந்த ரெட் சூட்டில் செய்திருக்கிறோம். இதற்கு ஐடியா கொடுத்தவர் இயக்குனர் ராம் தானாம்.

புகைபிடிக்க தனி அறை
அதேமாதிரி கிரியேட்டர்கள், டைரக்டர்கள் புகைபிடிக்க தனி அறைகள், ரிலாக்ஸாக கேரம், செஸ் விளையாட அறைவசதி என இன்னும் பல வசதிகளையும் செய்துள்ளேன். இதுமாதிரி வசதிகளுடன், இங்குள்ள எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டர்களுக்கான விலை உயர்ந்த வெளிநாட்டு இறக்குமதி நிறுவியுள்ளார்கள்.

பாலிவுட்டையும் தாண்டி, ஹாலிவுட்டுடன் போட்டிபோடும் தமிழ் சினிமாவின் தலைநகரமான சென்னையில் இப்படி ஹெச்.டி-3டி புரொஜக்‌ஷன் வசதியுடன் கூடிய டப்பிங் தியேட்டர்களை நிர்மாணிக்கவேண்டும் என்கிற எண்ணம் எப்படி வந்தது? என ‘டான் ஸ்டுடியோ’ உரிமையாளர் தன விக்னேஷிடம் கேட்டோம்…

“எனக்கு சொந்த ஊர் விருதுநகர். ஒரு தனியார் நிறுவனத்தில் D.F.M எனும் ‘டிஜிட்டல் பிலிம் மேக்கிங்’ கோர்ஸ் முடித்தேன். அதன்பின் குவைத்தில் நான்காண்டுக்காலம் விளம்பரப்படங்கள் மற்றும் டாக்குமெண்டரி படங்களில் பணிபுரிந்தேன். சென்னை திரும்பியதும் என்னுள் இருந்த சினிமா ஆசையின் வெளிப்பாடாக இப்படி ஒரு எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் ஸ்டுடியோவை உருவாக்கத் திட்டமிட்டேன்.

எனது நண்பர்களான நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர்கள் ராம், பாலாஜி தரணிதரன் உள்ளிட்டவர்களிடம் ஆலோசித்து அதன்படி, ஹெச்.டி-3டி வசதியுடன் கூடிய ஒரு ஸ்டுடியோவை உருவாக்கத் திட்டமிட்டு களம் இறங்கியபோது தயார் ஆனதுதான் இந்த ‘டான் ஸ்டுடியோ’. காரணம் சென்னையில் ஹெச்.டி டப்பிங் தியேட்டர்கள் இருக்கின்றன. 3டி புரொஜக்‌ஷன் வசதியுடன் கூடிய டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டர்கள் இல்லை” என்கிறார் தன விக்னேஷ்.

இனி, எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் டெக்னிக்கல் புதுமைகளை விரும்பும் தமிழ் சினிமா இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ‘டான் ஸ்டுடியோ’ வாயிற்கதவைத் தட்டுவது நிச்சயம் என்று நம்புவோம்!

Leave A Reply

Your email address will not be published.