பொதுவாக தமிழ் சினிமாவில் இயக்குனர்கள்தான் எப்போதும் ட்ரெண்ட் செட்டர்களாக இருப்பார்கள். ஆனால் இப்போது வேகமாக வளர்ந்து வரும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மூலம் சூப்பர்ஹிட் படங்களை தயாரித்துவரும் சி.வி.குமார், இந்த ட்ரெண்டையே அடியோடு மாற்றியவர். அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், வில்லா என தொடர் வெற்றிகளால் கோடம்பாக்கத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர்..
இதுவரை இவர் தயாரித்த படங்களை மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் நல்ல விலை கொடுத்து வாங்கி வெளியிட்டதுடன் அவற்றின் மூலம் நல்ல லாபமும் சம்பாதித்தன. இன்னும் பல தயாரிப்பு நிறுவனங்கள் இவரது தயாரிப்பில் வெளியாகவிருக்கும் படங்களை வாங்குவதற்காக வரிசைகட்டி நிற்கின்றன.
அதற்கேற்ற மாதிரி இவரது தயாரிப்பில் இருக்கும் படங்களின் பட்டியலின் நீளமும் அனுமார் வாலாய் நீள்கின்றது. தற்போது ராம் இயக்கத்தில் விஷ்ணு, நந்திதா நடிக்கும் ‘முண்டாசுபட்டி’ படத்தைத் தயாரித்து வருகிறது. இந்தப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அனுமோகனின் மகனும், இயக்குனர் கௌதம் மேனனின் உதவியாளருமான அருண் மோகன் இயக்கத்தில் நவீன் சந்திரா, சலோனி நடிக்கும் ‘சரபம்’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறது.
இந்த இரண்டு படங்களைத் தவிர, கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ’லூசியா’ படத்தை சித்தார்த், தீபா சன்னிதி, நரேன் மற்றும் பலர் நடிக்க தமிழில் தயாரிக்கிறார் சி.வி.குமார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் ‘பீட்சா’ படத்தில் இணை இயக்குனராகப் பணிபுரிந்த பிரசாத் ராமர் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தப்படுகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் ஆரம்பமாகிறது.